U-19 ஆசிய கோப்பை தொடரில் 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது.
2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் கடந்த 12ம் தேதி துபாயில் தொடங்கியது. இத்தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியதால், போட்டி தலா 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வைபவ் சூர்யவன்ஷி (9 பந்துகளில் 5 ரன்கள்), மற்றும் ஆயுஷ் மத்ரே 25 பந்துகளில் 38 ரன்களில் ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் ஜார்ஜ், 88 பந்துகளில் 85 ரன்கள், கனிஷ்க் சௌஹான் 46 ரன்கள் எடுத்தனர். அதன்படி 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 240 ரன்கள் எடுத்தது.
241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 41.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, ஹுசைஃபா அஹ்சன் 70 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம், இந்திய யு-19 அணி தொடர்ச்சியாக 2-வது வெற்றியைப் பெற்று, குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
