தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் 2026 ஜனவரி 4 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 துவங்கி 23 ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.
இவர்களில், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு மற்றும் அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10 ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவர்களுக்கான விடைத்தாள்கள் தயார் செய்யப்பட்டு பள்ளிகள் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், 2025-26 கல்வியாண்டுக்கான பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட நாள்காட்டியில், டிசம்பர் 24 முதல் 2026 ஜனவரி 4 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மூன்றாம் பருவ தேர்வு ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை அச்சிட்டு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கும்போது மாணவர்கள் கையில் புத்தகம் வழங்கப்பட உள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
