இந்தியாவில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் புதிய நடைமுறை விரைவில் அறிமுகமாகவுள்ளதா என்ற எதிர்பார்ப்பு, பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள இந்த முறையை நம் நாட்டிலும் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கான அம்சம் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளில் உள்ளதாகவும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
தற்போது, நம் நாட்டில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் வாரத்தில் 5 நாட்கள் வேலையையும், மற்ற தொழிற்சாலைகளில் 6 நாட்கள் வேலை நடைமுறையையும் பின்பற்றுகின்றன. ஆனால், ஜப்பான், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட பல வெளிநாடுகள், ஊழியர்களின் ‘வொர்க் லைஃப் பேலன்ஸ்’ஸை உறுதி செய்வதற்காக வாரத்தில் 4 நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை வழங்கும் முறையை பின்பற்றி வருகின்றன. ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த நடைமுறை, அந்நாடுகளில் நல்ல பலனைக் கொடுத்துள்ளது.
புதிய சட்டத்தின் முக்கிய அம்சம் என்ன..?
இந்த நடைமுறை இந்தியாவிலும் சாத்தியமா என்ற கேள்வி எழுந்த நிலையில், கடந்த நவம்பர் 21ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ள புதிய 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகள் (New Labour Code) மூலம் இது சாத்தியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் ஊதிய சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு சட்டம் 2020 ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை மாற்றி இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளின் கீழ், வாரத்தில் 4 நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குவதற்கான அம்சம் இடம்பெற்றுள்ளதாக மத்திய தொழிலாளர் அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
4 நாட்களுக்கு 12 மணி நேர வேலை :
இதுகுறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “புதிய தொழிலாளர் சட்டங்கள், வாரத்தில் 4 நாட்களுக்கு 12 மணிநேர வேலை செய்ய அனுமதிக்கின்றன. மீதமுள்ள 3 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் வாராந்திர வேலை நேரம் 48 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது விதி. ஒரு நாளைக்கு 8 மணிநேரம் பணி செய்தால், வாரத்திற்கு 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும். ஆனால், புதிய சட்டத்தின்படி, ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பணி செய்தால், 4 நாட்களில் 48 மணிநேர வேலையை ஊழியர்களால் முடிக்க முடியும். இந்த 12 மணிநேர வேலை நாளில் இடைவேளையும் அடங்கும்.
மேலும், கூடுதல் நேரம் (ஓவர் டைம்) வேலை செய்தால், அதற்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கவும் இந்த சட்டம் பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம், வரும் நாட்களில் நம் நாட்டிலும் வாரம் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை என்பது சாத்தியமாக அதிக வாய்ப்புள்ளது.
