அதிமுகவின் முக்கியப் புள்ளியும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தனது சொந்த கிராமத்தை உள்ளடக்கிய மயிலம் தொகுதிக்கு மாற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தோல்விக்குப் பிறகு கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி ராஜ்யசபா எம்.பி.யாக அவர் பதவி வகித்து வருகிறார்.
சி.வி. சண்முகம் தனது அரசியல் பயணத்தின் ஆரம்பத்தில் திண்டிவனம் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அவர், 2001 மற்றும் 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் திண்டிவனத்தில் வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர், 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தல்களில் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் விழுப்புரம் தொகுதிக்கு மாறினார். விழுப்புரம் தொகுதியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக அவர் நீடித்தார்.
ஆனால், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட சி.வி. சண்முகம், தி.மு.க. வேட்பாளர் லட்சுமணனிடம் சுமார் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். இதன் மூலம், விழுப்புரத்தில் தொடர்ச்சியாக அவர் பெற்று வந்த வெற்றிகளுக்கு தி.மு.க. முற்றுப்புள்ளி வைத்தது.
சொந்த மண்ணில் மீண்டும் போட்டி..?
கடந்த தேர்தலில் ஏற்பட்ட இந்தத் தோல்விக்குப் பிறகு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சி.வி. சண்முகம் தனது சொந்தக் கிராமமான அவ்வையார் குப்பத்தைச் சுற்றியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கிய மயிலம் தொகுதிக்கு மாறத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, மயிலம் தொகுதியில் போட்டியிடுவதற்காக, சி.வி. சண்முகம் சார்பில் அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
