“திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்” என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை 3-வது நாளாக செவ்வாய்க்கிழமையான இன்றும் தொடர்ந்தன. நேற்றைய கோயில் தரப்பு, அறநிலையத்துறை தரப்பு மற்றும் தர்கா தரப்பு வாதங்களை தொடர்ந்து இன்று வஃக்பு வாரியம், தர்கா தரப்பு அவர்களுக்கு எதிராக மனுதாரர் தரப்பு ஆகியோரது வாதங்கள் காரசாரமாக இடம்பெற்றன. அந்த வகையில் இன்று நீதிமன்றத்தில் நடந்தவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

வஃக்பு வாரிய தரப்பு வாதம்:-
வஃக்பு வாரிய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்துல் முபீன், “1920-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள பகுதி தர்காவுக்கு சொந்தமானது என்றும், நெல்லித்தோப்பு முதல் மலை உச்சி வரை உள்ள படிக்கட்டு பகுதியும் தர்காவுக்கே உரியது என்றும் அந்த உத்தரவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், 1920-ம் ஆண்டு தீர்ப்பின் அடிப்படையில் தர்காவும், அதனைச் சுற்றியுள்ள நிலங்களும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும் தர்காவுக்கு சொந்தமான இடத்தில் தான் அந்தத் தூண் அமைந்துள்ளது எனவும் கூறிய வழக்கறிஞர், மலையின் உச்சியில் தீபம் ஏற்றுவது கோயில் மரபு அல்ல என்பது 1862-ம் ஆண்டிலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கடந்த கால நீதிமன்ற உத்தரவுகளில் ‘தீபத்தூண்’ என எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் வாதிட்டார். இடையில் குறுக்கிட்டு திருப்பரங்குன்றம் தர்காவுக்கு சொந்தமான நிலப்பரப்பின் விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதற்கான தொடர்புடைய ஆவணங்களை டிச.17-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
தொடர்ந்து பேசிய தர்கா தரப்பு வழக்கறிஞர், சமீப காலமாக மட்டுமே ‘தீபத்தூண்’ என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், தனி நீதிபதி வழங்கிய சமீபத்திய தீர்ப்பில் பழைய தீர்ப்புகள் மற்றும் வரலாற்றுத் தரவுகள் முறையாக கருத்தில் கொள்ளப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மாவட்ட ஆட்சியர் & காவல்துறை தரப்பு வாதம்:-
இதையடுத்து அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிடுகையில், “1920-ம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பில், ‘தர்காவை ஒட்டியுள்ள பகுதிகள் தர்காவுக்கே சொந்தம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1966-ம் ஆண்டு கூறப்பட்ட தீர்ப்பில், ‘வேறு இடத்தில் தீபம் ஏற்றுவது குறித்து கோவில் நிர்வாகம் பரிசீலிக்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பரிசீலிப்பதற்கான தேவை கோவில் நிர்வாகத்திற்கு ஏற்படவில்லை. மேலும், மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டுமென்று மட்டுமே கோவில் நிர்வாகத்துக்கு அளித்த மனுவில் மனுதாரர் ராம ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் கோரிய நிவாரணத்தை தாண்டி தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இப்பிரச்னையில் இந்தியா பற்றி எரிகிறது. தனி நீதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கிறார். தனி நீதிபதியின் உத்தரவால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது” என்று வாதிட்டார். தொடர்ந்து வாதிட்ட விகாஸ் சிங், “அது தீபத் தூணாகவே இருந்தாலும் அங்கு தீபம் ஏற்ற நீதிபதியால் உத்தரவிட முடியாது. தீபம் ஏற்றுவது குறித்துப் பரிசீலிக்கலாம் என கோவில் தரப்பிடம் கூற மட்டுமே முடியும்” என குறிப்பிட்டார்.
மனுதாரர் தரப்பு வாதம்:-
இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார், “இவ்விவகாரத்தில் தொடர்ந்து வழக்குகள் நடப்பதே, அது சர்ச்சைக்குரிய விவகாரம் என்பதற்கான ஆதாரம் தான். அப்படி இருக்கும்போது ‘இதுபோன்ற வழக்கமே இல்லை’ என்று சொல்வது சரியானதாக இருக்காது” என குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, “1920-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின் படி, தர்கா அமைந்துள்ள இடம் தவிர்த்துப் பிற இடங்கள் கோவிலுக்குச் சொந்தமானவை. அதுவே 1996-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, உச்சிப் பிள்ளையார் கோவில் தவிர, மலையின் பிற இடங்களிலும் தீபம் ஏற்ற முடியும். தர்காவில் இருந்து 15 மீட்டர் தொலைவில் தீபம் ஏற்றவும் அந்த உத்தரவு அனுமதித்திருக்கிறது. அந்தத் தீர்ப்பு இன்று வரை எதிர்க்கப்படவில்லை” என்று கூறி வாதிட்டார்.
மறுப்பு தெரிவித்த நீதிபதிகள்:-
வாதங்களை கேட்ட நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன், “கோயில் மற்றும் தர்கா தரப்பிற்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடலாமா?” என மனுதாரர் தரப்பிடம் கேட்ட போது, “பேச்சுவார்த்தை நடத்துவது இந்த விவகாரத்தில் தீர்வு கிடைப்பதைத் தாமதப்படுத்தும்” என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைக்கேட்ட நீதிபதிகள், “மார்கழி பிறந்துவிட்டது. அடுத்த கார்த்திகைக்கு இன்னும் 360-க்கும் மேலான நாட்கள் உள்ளன என கருத்து தெரிவித்தனர். அதுவே மறுபுறம், “இந்த விவகாரத்தில் மத்தியஸ்தர்களுடன் அமர்ந்து பேசி ஒரு தீர்வை எட்டத் தயாராக இருக்கிறோம். இதற்காக ஓய்வு பெற்ற மூத்த நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்” என தர்கா தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான தனி நீதிபதியின் விசாரணைக்குத் தடை விதிக்கப்பட மாட்டாது என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது தலைமைச் செயலாளர் மற்றும் ஏ.டி.ஜி.பி. ஆஜராக விலக்கு அளிக்க முடியாது எனவும் அனுமதி மறுத்தனர். ஒருவேளை நேரில் ஆஜராக விலக்கு வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அணுகலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து வழக்கு விசாரணை நவ.17-ம் தேதியான நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
