’பருத்தி’ திரைப்பட இயக்குநர் என்னிடம் கதை கூறிய போது நான் ஏன் இப்படத்தில் நடிக்க வேண்டும் என அவரிடம் கேள்வி எழுப்பினேன் என நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார்.
புதுமுக இயக்குநர் குரு இயக்கத்தில் சோனியா அகர்வால் முதன்முறையாக கிராமத்து கதைக் களத்தில் நடித்துள்ள திரைப்படம் ’பருத்தி’. இப்படம் வரும் 25 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் திருமலை, நடிகர் உதயா, நடிகை சோனியா அகர்வால் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நடிகர் உதயா பேசுகையில், “சோனியா அகர்வாலை எனக்கு 7G ரெயின்போ காலனி திரைப்படத்தில் இருந்து மிகவும் பிடிக்கும். முதன் முறையாக கிராமத்து கதைக் களத்தில் அவரை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
தொடர்ந்து தயாரிப்பாளரும் இயக்குநருமான திருமலை பேசுகையில், ”தமிழ் சினிமாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. பெரிய திரைப்படத்திற்கு பைனான்ஸ் போன்ற வசதிகள் எளிதாக கிடைக்கின்றன. சிறிய திரைப்பட தயாரிப்பாளர்கள் மிகுந்த சிக்கலுக்கு ஆளாகி வருகிறார்கள். சிறிய தயாரிப்பாளர்களுடைய நிலைமையை காக்கக் கூடிய வகையில் வரும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் நல்ல தலைவர்கள் கிடைக்க வேண்டும். தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தியில் திரைப்படம் வெளியான உடன் ஆன்லைனில் வருவதில்லை. இருப்பினும் தமிழில் திரைப்படம் வெளியான அன்று இரவிலேயே திரைப்படம் இணையதளத்தில் வந்துவிடுகிறது. இந்த நிலை மாற வேண்டும்” என்றார்.
நிகழ்வில் சோனியா அகர்வால் பேசுகையில், “முதன்முறையாக கருப்பு நிற ஒப்பனையுடன் நடித்துள்ளேன். இயக்குநர் என்னிடம் வந்து கதை சொல்லும் போதே, வேறு யாராவது ஒப்பந்தம் செய்யலாமே? என்னை எதற்காக ஒப்பந்தம் செய்கிறீர்கள்? என கேட்டேன். அதற்கு அவரோ என் மீது நம்பிக்கை இருப்பதாகவும், என்னிடம் இருக்கும் இயல்பான நடிப்பு நிச்சயம் திரைப்படத்திற்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். நிச்சயமாக எல்லோருக்கும் விருப்பமான படமாக அமையும்” என்றார்.
நடிகை சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் 7g ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, காதல் கொண்டேன், கோவில், மதுர உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
