உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அவதார் படத்தின் மூன்றாம் பாகம் இன்று (டிச.19) திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
பிரமாண்ட ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அவதார். இதன் அடுத்த பாகமான, “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” 2022ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி வசூலில் சக்கை போடு போட்டது.
இந்தநிலையில், தற்போது மூன்றாம் பாகமாக ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ உருவாகி இருக்கிறது. காட்சிகளில் பிரமிப்பூட்டும் இதன் முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அவதார் என்றாலே பிரம்மாண்டம்தான்… அதில் சாகசத்துடன் நெகிழ்ச்சியூட்டும் காட்சிகளை வைத்து அசத்தும் ஜேம்ஸ் கேமரூனின் மாயாஜாலத்தை காண ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.
முந்தைய பாகங்களில் காடு மற்றும் நீர்வாழ் மக்களை ரசிகர்கள் கண்டுகளித்தனர். இந்த மூன்றாவது பாகத்தில் ‘நெருப்பு’டன் தொடர்புடைய பண்டோரா கிரகத்தின் புதிய பழங்குடியினரை (Ash People) ஜேம்ஸ் கேமரூன் அறிமுகப்படுத்த உள்ளார்.
இந்தப் படத்தில் நவி (Na’vi) இன மக்கள் அனைவரும் நல்லவர்கள் மட்டுமல்ல, அவர்களிலும் தீயவர்கள் இருப்பார்கள் என்பதை நெருப்புப் பழங்குடியினர் மூலம் காட்டப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
