12வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
துபாயில் 19 வயதுக்குட்பட்டோருக்கான 12வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் தகுதி பெற்றன.
அதன்படி, முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. இதில், வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. இதனால், போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் ஹெனில் படேல் மற்றும் கனிஷ்க் சவுஹான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின், தொடக்க ஆட்டக்காரர்கள் ஆயுஷ் மாத்ரே 7 ரன்களிலும், வைபவ் சூர்யவன்ஷி 9 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இருப்பினும் ஆரோன் ஜார்ஜ்- விஹான் மல்ஹோத்ரா இணை சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி, 139 ரன்கள் அடித்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
வரும் 21ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
