கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) அமலுக்கு கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் இந்த திட்டத்தின் பெயரை, ‘விகிஷ்த் பாரத் கேரன்ட்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) Viksit Bharat-Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G) (விபி-ஜி ராம்-ஜி)’ என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது. இந்தப் பெயர் மாற்ற மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மகாத்மா காந்திக்கு பதிலாக ‘ராம்’ என்ற பெயர் சேர்ப்புக்கு எதிர்ப்பு, ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பல்வேறு நுணுக்கமான உட்பிரிவுகள் மூலம் இச்சட்டம் சிதைப்பதால் எதிர்ப்பு என இரண்டு விஷயங்களை முன்வைத்து எதிர்ப்பு வலுக்கிறது.
இந்தநிலையில், காந்தி பெயரில் மீண்டும் ஒரு புதிய திட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கியுள்ளார். அந்த புதிய திட்டத்திற்கு மகாத்மா ஸ்ரீ என பெயர் மாற்றம் செய்துள்ளார். தேச தந்தையை மதிக்க தெரியாதவர்களுக்கு பாடம் புகட்டுவோம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தர மறுத்தாலும், மாநில அரசு பணத்திலேயே வேலை வழங்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மம்தாவின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவுகள் பெருகி வருகின்றன.
