2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த பிறகு தான் மனதளவில் உடைந்து போனதாகவும், கிரிக்கெட்டை விட்டு விலக முடிவு செய்ததாகவும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்தியா அற்புதமாக விளையாடியது. தொடர்ச்சியாக ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு அணி இறுதிப் போட்டியை எட்டியது. முழு நாடும் வெற்றியைக் கனவு கண்டது, ஆனால் இறுதிப் போட்டியில் டிராவிஸ் ஹெட்டின் சதம் இந்தியாவின் கனவைத் தகர்த்தெறிந்தது. அந்தத் தோல்வி ரோஹித்தை மிகவும் உலுக்கியது.
2022 இல் கேப்டன் பொறுப்பேற்றதிலிருந்து, இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்வதே தனது ஒரே குறிக்கோள் என்று ரோஹித் விளக்கினார். இந்த இலக்கிற்காக அவர் பல மாதங்கள் அல்ல, பல ஆண்டுகளாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தார். துர்திருஷ்டவசமாக அந்த போட்டியில் தோல்வியை தழுவியது இந்திய வீரர்கள் மட்டுமல்ல, ரசிகர்கள் என அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது.
இதுகுறித்து பேசிய ரோகித் ஷர்மா, 2023 உலக கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நான் முற்றிலும் மனமுடைந்து போனேன். இந்த விளையாட்டு என்னடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டதால் இனி விளையாட விரும்பாமல் ஓய்வு பெற நினைத்தேன். என்னிடம் எதுவும் மிச்சமில்லை என்று தோன்றியது. அதில் இருந்து மீள சிறிது காலம் ஆனது.
இறுதிப் போட்டி தோல்வியால் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். என்ன நடந்தது என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் கடினமான நேரமாக இருந்தது. ஏனென்றால் அந்த உலக கோப்பைக்காக நான் 2 ,3 மாதங்களுக்கு முன்பு மட்டு மல்ல 2022-ல் கேப்டன் பதவியை ஏற்றதில் இருந்தே எல்லாவற்றையும் அர்ப்பணித்து இருந்தேன்,
20 ஓவர் உலககோப்பையாக இருந்தாலும் சரி, 2023 உலக கோப்பையாக இருந்தாலும் சரி, உலக கோப்பையை வெல்வது மட்டுமே எனது ஒரே இலக்காக இருந்தது. அது நடக்காத போது நான் முற்றிலும் நிலைகுலைந்து போனேன். எனது உடலில் எந்த சக்தியும் இல்லை. அதில் இருந்து மீண்டு பழைய நிலைக்குத் திரும்ப 2 மாதங்கள் ஆனது என்று கூறியுள்ளார்.
