திமுகவிற்கு எதிராக ஒருமித்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் கூட்டணிக்கு வரலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையலாம். இதுதான் திமுக ஆட்சியின் கடைசி ஆண்டு இதற்கு மேல் திமுகவால் ஆட்சிக்கு வரமுடியாது என்று கூறினார்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு குடும்ப அட்டைக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியதை திமுக அரசுக்கு பாராட்ட மனமில்லை. 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்துவதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை மத்திய அரசு செய்துள்ளது என்று கூறினார்.
100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றியதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ரெயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், NDA கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸை இணைப்பது குறித்து நாளை பியூஷ் கோயல் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
