உலகளவில் அறிவாற்றல் குறைபாடு மற்றும் மறதி நோய் (Dementia) போன்ற நரம்பியல் கோளாறுகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கும் சுகாதார பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஞாபக மறதி பொதுவாக முதுமை அடையும் போது ஏற்படும் என்பதை பலரும் அறிந்ததே. ஆனால், நமது அன்றாட வாழ்க்கை முறையும், குறிப்பாக நாம் சாப்பிடும் உணவும் மூளையின் ஆரோக்கியத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்கிறது ஆய்வு.
நாள் முழுவதும் செயல்படுவதற்கு ஆற்றலை வழங்கும் காலை உணவில் நாம் செய்யும் சில தவறுகள், நீண்ட காலத்திற்கு நமது மூளை ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, மறதி நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று சில ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அந்த வகையில், மூளையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்து, மறதி நோய் அபாயத்தை அதிகரிக்கும் 3 மோசமான காலை உணவுப் பழக்கங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள்: காலை உணவில் சர்க்கரை அதிகமாக இருக்கும் உணவுகள் மற்றும் பானங்களைச் சேர்ப்பது மிகவும் பொதுவான ஒரு பழக்கம். வேலை வேகமாக முடியும் என்ற நோக்கில் சாக்கோஸ், மியூஸ்லி, பிரட், சுவை சேர்க்கப்பட்ட யோகர்ட் மற்றும் சில ஜூஸ்கள் என சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை பலரும் எடுத்துக்கொள்கின்றனர்.
அதிகப்படியான சர்க்கரை ரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்க செய்கிறது. இது இன்சுலின் எதிர்ப்புக்கு (Insulin Resistance) வழிவகுக்கும். மேலும், அதிக ரத்த சர்க்கரை அளவு மூளையில் வீக்கம் மற்றும் அமைலாய்டு பிளேக்குகள் (Amyloid Plaques) உருவாவதற்கு உதவுகிறது என Associations of sugar intake, high-sugar dietary pattern, and the risk of dementia என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிளேக்குகள் அல்சைமர்ஸ் நோயுடன் நேரடியாகத் தொடர்புடையவை.
இந்த உணவுகளை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து தினமும் காலை உணவாக எடுத்துக்கொள்வது, நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனைப் பாதிக்கிறது. இதற்கு பதிலாக, சர்க்கரை சேர்க்கப்படாத ஓட்ஸ், முழு தானியங்கள், மற்றும் பழங்களைச் சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.
அதிக நிறைவுற்ற கொழுப்புள்ள உணவுகள்: வெண்ணெய், சீஸ், பொரித்த உருளைக்கிழங்கு மற்றும் கொழுப்பு நிறைந்த இறைச்சி போன்ற அதிக நிறைவுற்ற கொழுப்புள்ள உணவுகளை காலை உணவில் அதிகமாகச் சேர்ப்பது மற்றொரு ஆபத்தான பழக்கமாகும். இந்த கொழுப்புகள், குறிப்பாக அடிக்கடி அதிகமாக உட்கொள்ளப்படும்போது, ரத்த நாளங்களில் அடைப்புகளை ஏற்படுத்தி, இருதய நோய்கள் மற்றும் வாஸ்குலர் பிரச்சனைகளை ஊக்குவிக்கின்றன.

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால், மூளை செல்கள் போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை பெற முடியாமல் போகிறது. இதனால் நரம்பியல் சேதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது, இது மறதி நோய் அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது. வெண்ணெய் மற்றும் சீஸ் ஆகியவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான கொழுப்புகளான நட்ஸ் (Nuts), விதைகள், ஆலிவ் எண்ணெய் மற்றும் அவகேடோ ஆகியவற்றை காலை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது.
காலை உணவைத் தவிர்ப்பது: இன்றைய பிஸியான வாழ்க்கை சூழலில் பலரும் காலை உணவை தவிர்க்கின்றனர். வேலைப்பளு காரணமாகவோ அல்லது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ பலர் காலை உணவைத் தவிர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இது மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமான பழக்கமாகும் என Associations between breakfast skipping and outcomes in neuropsychiatric disorders, cognitive performance, and frailty: a Mendelian randomization study என்ற தலைப்பில் வெளியான ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூளை ஆற்றலுக்கான ஒரே முக்கிய ஆதாரம் ரத்த சர்க்கரை மட்டுமே. காலை உணவைத் தவிர்ப்பது ரத்த சர்க்கரை அளவை வெகுவாகக் குறைக்கிறது. காலை உணவைத் தவிர்ப்பவர்கள், காலை உணவு உண்பவர்களை விட குறைந்த அறிவாற்றல் மதிப்பெண்களைப் பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சரியான நேரத்தில் மூளைக்கு ஆற்றல் கிடைக்காதபோது, கவனம் செலுத்தும் திறன், மன ஒருமைப்பாடு மற்றும் நினைவாற்றல் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. நீண்ட காலத்திற்கு, இது நரம்பு செல்கள் சிதைவு (Neurodegeneration) மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தை அதிகரிக்கிறது. காலை உணவைத் தவிர்க்காமல், எளிய, சீரான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிடுவது மூளைக்குத் தேவையான ஆற்றலைத் தொடர்ந்து வழங்க உதவுகிறது.
எந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்? மறதி நோய் அபாயத்தைக் குறைக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், காலை உணவில் முழு தானியங்கள், ஆரோக்கியமான புரதங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்க வேண்டும். உதாரணமாக,
- நட்ஸ் மற்றும் பழங்களுடன் கூடிய ஓட்ஸ்.
- முழு தானிய பிரட்களுடன் அவகேடோ மற்றும் முட்டை.
- ஆப்பம், இட்லி, அல்லது தோசை மற்றும் அதனுடன் பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது.
காலை உணவு என்பது வெறும் வயிறு நிரப்புவது மட்டுமல்ல, அது மூளை ஆரோக்கியத்திற்கான ஒரு முதலீடு ஆகும். மேலே குறிப்பிடப்பட்ட மோசமான பழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம், மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மறதி நோய் மற்றும் அறிவாற்றல் குறைபாட்டின் அபாயத்தை நாம் கணிசமாகக் குறைக்க முடியும். ஆரோக்கியமான காலை உணவுப் பழக்கங்கள் நீண்ட காலத்திற்கு நமது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் திறனைப் பாதுகாக்கும்.
