இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 122 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 32 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 பந்துகளில் 69 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார்.
இதேபோன்று பந்து வீச்சில் கிரந்தி கவுடு, தீப்தி சர்மா, ஸ்ரீசரணி, வைஷ்ணவி சர்மா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இலங்கை அணியை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தனர். தொடரில் இந்திய மகளிர் அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் அதே மைதானத்தில் இன்று 2-வது ஆட்டம் நடைபெறுகிறது. ஜெமிமா ரோட்ரிக்ஸிடம் இருந்து மேலும் சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.
அதேவேளையில் முதல் போட்டியில் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த ஷபாலி வர்மா, இம்முறை கவனத்தை ஈர்க்கும் வகையில் ரன்கள் குவிக்க முயற்சிக்கக்கூடும்.
