விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் அரசியல் பேசக் கூடாது என மலேசிய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளநிலையில், வரும் 27ம் தேதி மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
பொதுவாக விஜய் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே அதில் அவரின் பேச்சில் அரசியல் கலந்து இருக்கும். இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழலில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தநிலையில், ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசினால், அது அரசியல் நிகழ்ச்சி போன்று ஆகிவிடும் என்பதால், படக்குழுவுக்கு மலேசிய அரசு ஒரு தடை உத்தரவு போட்டுள்ளதாக தெரிகிறது. அதில், ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா முழுக்க சினிமா சார்ந்த நிகழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விழாவில் பங்கேற்பவர்கள் யாரும் அரசியல் பேசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மலேசிய அரசு ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
