விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கர்நாடகாவைச் சேர்ந்த கேவிஎன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பாதையை தொடர இருப்பதால், ‘ஜனநாயகன்’ தான் அவருடைய கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
அண்மையில் இந்தப் படத்தின் ‘தளபதி கச்சேரி’, ‘ஒரு பேரே வரலாறு’ ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் வரும் 27ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் டிரெய்லர் வருகிற 2026 ஜனவரி 1ம் தேதி டிரெய்லர் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையில் ‘ஜன நாயகன்’ படத்திற்கான வெளிநாட்டு டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது.
‘ஜன நாயகன்’ படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை பொறுத்தவரை, சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவினை ஏஜிஎஸ் நிறுவனம், வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு உரிமையினை எஸ் பிக்சர்ஸ் நிறுவனம், கோயம்புத்தூர் உரிமையினை மன்னாரு, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமையினை பிரதாப், சேலம், திருச்சி மற்றும் மதுரை ஏரியா உரிமையினை ஃபைவ் ஸ்டார் செந்தில் ஆகியோர் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு பிரபாஸின் ‘ராஜா சாப்’, சிரஞ்சீவியின் ‘Mana ShankaraVaraprasad Garu’ ஆகிய படங்கள் வெளியாவதால், ‘ஜன நாயகன்’ படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தெலுங்கில் படத்தை வெளியிட இருந்த விநியோகஸ்தர் பின்வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தி பேசும் மாநிலங்களை பொறுத்தவரை அதற்கான தியேட்டர் உரிமையை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆனால், இந்தியில் போதுமான புரமோஷன் இல்லாதது படத்தின் வெற்றியை பாதிக்கும் என கூறப்படுகிறது. வெளிநாடுகளில் டிக்கெட் புக்கிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.
