தேர்தல் நேரத்தில் மட்டும் திருமாவளவன் கோயிலுக்கு சென்று பட்டை பூசிக் கொள்வது ஏன்? கையில் வேல் வாங்கிக் கொள்வது ஏன்?என பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் 21 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பாஜக சார்பில் மாநிலத் துணை தலைவர் குஷ்பு மற்றும் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் சுனாமியால் உயிரிழந்த நபர்களுக்கு கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மீனவ மக்களுக்கு உணவுகளை வழங்கினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு, ”டிசம்பர் 26 ஆம் தேதி யாராலும் மறக்க முடியாத நாள். அனைவரும் உறங்கி கொண்டு இருந்த நேரம் சுனாமி வந்ததில் பலர் உயிரிழந்தனர். உயிரிழந்த மக்களுக்கு பாஜக சார்பாக அஞ்சலி செலுத்தினோம். மீனவர்களின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்” என தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடுமா? என விசிக தலைவர் திருமாவளவன் பேசியது குறித்த கேள்விக்கு, ”விசிக தலைவர் திருமாவளவன் மனநிலை இது தான். இதுவே கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடினால் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடுமா என கூற முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் ”அவர் மட்டும் தேர்தல் நேரத்தில் கோயிலுக்கு போவார், பட்டை பூசிக் கொள்வார், கையில் வேல் வாங்கிக் கொள்வார். இவையெல்லாம் நாலு சுவற்றுக்குள் நடக்கும், மக்களுக்கு தெரியாது என நினைப்பார்கள். இந்த தேர்தலுக்கு அவர் எந்த கோயிலுக்கும் போக வேண்டாம். எந்த தேவாலயம், பள்ளிவாசலிலும் திருமாவளவன் நிற்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற சென்னது பாஜக அல்ல, நீதிமன்றம்” என தெரிவித்தார்.
மத்திய அரசு திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் மாற்றம் குறித்து ப.சிதம்பரம் விமர்சித்தது குறித்து பேசுகையில், “காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாட்டை ஆண்ட நபர்கள் பெயர்களை சூட்டி உள்ளீர்கள். ஆனால் எதாவது ஒரு மத்திய அரசு திட்டத்தில் மோடி என பெயர் உள்ளதா? அவர்கள் தான் ராஜீவ்காந்தி பெயரில் திட்டங்களை கொண்டு வந்தார்கள்” என கூறினார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் குஷ்பு போட்டியிட உள்ளாரா? என்ற கேள்விக்கு, “தேர்தலில் போட்டியிடும் ஆசையோடு நான் கட்சிக்கு வரவில்லை. கட்சியும் என்ன சொல்கிறதோ அதுக்கு நான் கட்டுப்பட்டு செயல்படுகிறேன். தேர்தலில் வாய்ப்பு கொடுப்பார்கள் – பொறுப்பு கொடுப்பார்கள் என எந்த எதிர்பார்ப்போடும் நான் பாஜகவுக்கு வரவில்லை. கட்சி வளர்ச்சிக்கு தான் நான் வந்துள்ளேன்” என தெரிவித்தார்.
விஜய்யும், சீமானும் ஆர்.எஸ்.எஸ் பிள்ளைகள் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளது குறித்து கேட்ட போது, திருமாவளவன் யாரின் பிள்ளை? திமுகவின் பிள்ளையா? காங்கிரஸ் பிள்ளையா? என கேள்வி எழுப்பினார். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்படுவதாக வெளியான தகவல் குறித்து கேட்ட போது, வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. விரைவில் டெல்லி சென்று பியூஷ் கோயலை சந்திக்க உள்ளேன். விரைவில் பாஜக மாநில தலைவர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவார்கள் என தெரிவித்தார்.
