இலங்கை மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.
இலங்கை மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டியானது நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்ஃபீல்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங்கை தேர்வு செய்து இலங்கை மகளிர் அணியை பெட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு ஹாசினி பெரேரா-கேப்டன் சமாரி அத்தபத்து இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அத்தபத்து 3 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்ஷிதா சமரவிக்ரமாவும் 2 ரன்களில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு ஹாசினி பெரேராவும் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் இமெஷா துலானி 27 ரன்களையும், கவிஷா தில்ஹாரி 20 ரன்களையும், கௌஷானி நுத்யாங்கனா 19 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரேனுகா சிங் 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். மறுபக்கம் விளையாடிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஷஃபாலியுடன் இணைந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா அரைசதம் கடந்தும் அசத்தினார். மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஃபாலி 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 79 ரன்களைச் சேர்த்தார்.
அவருடன் இணைந்து ஹர்மன்ப்ரீத் கவுரும் 21 ரன்களைச் சேர்க்க, இந்திய மகளிர் அணி 13.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் ரேனுகா சிங் ஆட்ட நாயகி விருதை வென்றார்.
