புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், ‘வீரதீர குழந்தைகள் தினவிழா’ கதிர்காமம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “குழந்தைகளுக்கு வீர தீர கதைகள், நாட்டுப்பற்று, மொழிப்பற்று ஆகியவற்றைக் கூறி வளர்க்க வேண்டும். அப்போது தான், குழந்தைகள் ஒரு செயலை பயமின்றி துணிச்சலோடும் செய்வார்கள்.
கருவுற்ற தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் அங்கன்வாடிகள் மூலம் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல பள்ளிகளில் காலை, மதியம் மற்றும் மாலையில் உணவும், சிற்றுண்டியும் வழங்கி வருகிறோம். பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் அனைவரும் பட்டப்படிப்பு படிக்கும் வகையில், தேவையான அளவுக்கு கல்லூரிகளை உருவாக்கியுள்ளோம். அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். அவருக்கு வலுசேர்க்கும் விதமாக, நாமும் இணைந்து செயல்பட வேண்டும்.
புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம். மேலும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும். அதே போல், முதியோர் உதவித்தொகை தற்போதுள்ள தொகையுடன் கூடுதலாக ரூ.500 உயர்த்தி வழங்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
