சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை ராமதாஸ் இன்று அறிவிப்பார் என சேலத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
சேலம் ஐந்து ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (29-ம் தேதி) நடக்கும் பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சேலத்தில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு பாமக செயற்குழு கூட்டமும், தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு பொதுக்குழு கூட்டமும் நடைபெற உள்ளது.
தேர்தல் கூட்டணி குறித்து நிறுவனர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். பாமக நிறுவனர் ராமதாஸால் பாமக-வில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவியில் இருந்தும் அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். என்னை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. பாமக-வை பிளவுபடுத்த அன்புமணி மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளாலும் ராமதாஸ் வேதனை அடைந்துள்ளார். அன்புமணியால் தூண்டிவிடப்பட்ட சிலரின் அவதூறு
பேச்சால் ராமதாஸ் நிலைகுலைந்துள்ளார். பாமக-வை சூழ்ச்சியால் அபகரிக்கப் பார்க்கிறார்கள். தான் நிலைகுலைந்து கண் கலங்கினாலும் கட்சியை வலிமையான சக்தியாக உருவாக்க ராமதாஸ் முயற்சித்து வருகிறார். அன்புமணியிடம் சென்ற நிர்வாகிகள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்.
பாமகவின் அடையாளம் ராமதாஸ் தான். வரும் தேர்தலில் அவர் சொல்பவர்களுக்கு தான் பாமகவினர் வாக்களிப்பார்கள். அண்மையில் வெளியான ராமதாஸின் உருக்கமான பேச்சு அனைவருக்கும் வேதனை அளிக்கிறது. அவரது பேச்சு வரும் தேர்தலில் வாக்காக மாறும். ராமதாஸ் அமைக்கும் கூட்டணி தான் வெற்றி கூட்டணியாக அமையும். அந்த கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும்.
பாமக-வின் செயற்குழுவை நடத்தக் கூடாது எனக்கூற அன்புமணிக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. தற்போது வரை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை யாரிடமும் நடைபெறவில்லை. பாமக தனித்துப் போட்டியிடாது. நிச்சயம் கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்திப்போம். கூட்டணிக்கு அழைக்கும் எந்த கட்சியும் சுயநலமாக செயல்படும் அன்புமணியை நம்பவில்லை. பொதுநலத்துடன் செயல்படும் ராமதாஸை தான் நம்புகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
‘உப்பு சப்பு இல்லாமல் போகும்’ – சேலத்தில் இன்று நடைபெற உள்ள செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராமதாஸ் நேற்று சேலம் வந்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பொதுக் குழுவில் முடிவு செய்வதை இன்றே சொன்னால் உப்பு சப்பு இல்லாமல் போகும். கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிட பொதுக்குழு எனக்கு அதிகாரம் வழங்கும். உருக்கமான வீடியோ வெளியிட்டது குறித்து, நடக்கவுள்ள பொதுக்குழுவில் எனது பேச்சை கேட்டுவிட்டு, மீண்டும் என்னை சந்தியுங்கள்’’ என்றார்.
