சென்னையில் ஒரு பிரபல நிறுவனத்தின் பெட்ரோல் பங்கில் தனது சொகுசு காருக்கு டீசல் போட்ட போது அதில் தண்ணீர் கலந்து மோசடி செய்ததால் தனது கார் ரிப்பேராகி ரூ. 3 லட்சம் செலவு செய்ததாக விஜய் டிவி ஆங்கர் மாகாபா ஆனந்த் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் கூறியிருப்பதாவது: டீசல்ல தண்ணீர் கலந்ததால கார் ரிப்பேராகி 3 லட்சம் செலவாகிடுச்சு. இது ஆதாரத்தோட நிரூபிச்சதும் கோர்ட்டுக்கு போயிடாதீங்க, 80 ஆயிரம் தரோம்னு பெட்ரோல் பங்க் நிர்வாகம் பேரம் பேசுறாங்க.
உங்கள நம்பிதானே பெட்ரோல், டீசல் போட வரோம். ஆனால் இப்படி பண்ணா டீசலையும் இனி மக்களே தயாரிக்கணுமா? இந்த பங்க் மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு என விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் குமுறியுள்ளார். இவர் தற்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், அது இது எது, அண்டாகாகசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் பணியாற்றி வரும் இவர், பல்வேறு எஃப்.எம். ரேடியோக்களில் ஆர்.ஜே.வாகப் பணியாற்றிய ஆனந்த், “சினிமா காரம் காபி” என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். இந்த நிகழ்ச்சி அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
இதற்கிடையே, “அது இது எது” என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயன் வெள்ளித்திரைக்குச் சென்றதால், அந்த நிகழ்ச்சியை யார் நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. அப்போது, அந்த நிகழ்ச்சி மாகாபா ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இருந்தே இவருடைய புகழ் அதிகரித்தது. இதையடுத்து, விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளான சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆஃப் டான்ஸ், மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு, சவுண்ட் பார்ட்டி, ஊ சொல்றியா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.இவருக்கு ஒரு எபிசோடை தொகுத்து வழங்க ரூ 2 லட்சம் முதல் ரூ 3 லட்சம் வரை ஊதியம் வாங்குகிறார் என சொல்லப்படுகிறது.
