தேர்தல் அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வகையில் பிரத்யேக செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை திமுக அதி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தலை சந்திப்பதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் முக்கியமானது தேர்தல் அறிக்கை. இதில்தான் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யும் பணிகள், திட்டங்கள், தீர்வுகள் குறித்த வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கும். இதனை முன்வைத்துதான் பிரச்சாரங்களும் நடைபெறும்.
அந்த வகையில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டது. அதில், டி.கே.எஸ். இளங்கோவன் (செய்தி தொடர்பு தலைவர்), கோவி செழியன் (வர்த்தகர் அணி துணைத் தலைவர்) , பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளர்), டி.ஆர்.பி. ராஜா, (தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர்), எம்.எம். அப்துல்லா, (அயலக அணிச் செயலாளர்), பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (செய்தித் தொடர்பு செயலாளர், மருத்துவர் எழிலன் நாகநாதன் (மருத்துவ அணிச் செயலாளர்), கார்த்திகேய சிவசேனாபதி (சுற்றுச்சூழல் அணிச் செயலாளர்), ஆ.தமிழரசி ரவிக்குமார் (மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்), ஜி.சந்தானம், இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு), சுரேஷ் சம்பந்தம் (ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, கடந்த டிசம்பர் 22ம் தேதி திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பு இருக்கும் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், தேர்தல் அறிக்கையில் என்னென்ன விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்று பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்காக பிரத்தியேக செயலியை திமுக தலைமை உருவாக்கியுள்ளது. இந்த பிரத்யேக செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்து வைக்கிறார்.
