ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இல்லம் குறிவைத்துத் தாக்கப்பட்டதாக வரும் செய்திகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவிற்கு வடக்கே உள்ள நோவ்கோரோட் பிராந்தியத்தில் உள்ள புதினின் இல்லத்தின் மீது 91 உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்யா கூறியுள்ளது. இது உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். எந்தவொரு முரண்பாடும் கடுமையான செயல்களை தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படவேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதனை கண்டித்த மோடி, பகைமைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நீடித்த அமைதியை அடைவதற்கும் தற்போதைய இராஜதந்திர முயற்சிகளே சிறந்த வழி என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இந்த முயற்சிகளில் கவனம் செலுத்துமாறும், அவற்றை பலவீனப்படுத்தும் எந்தவொரு செயலிலும் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஊடக அறிக்கைகளின்படி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் 91 நீண்ட தூர ஆளில்லா விமானங்கள் நாட்டைத் தாக்கின, இருப்பினும் அவை எந்த உயிரிழப்பையும் ஏற்படுத்தவில்லை என்று வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தொலைக்காட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். அவை அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டன. சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கும் உரிமை ரஷ்யாவிற்கு உள்ளது என்றும் அவர் எச்சரித்தார். இத்தகைய தாக்குதல்கள் எதையும் உக்ரைன் மறுத்துள்ளது. ரஷ்ய ஊடகங்களின்படி, கிரெம்ளின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் இந்தச் சம்பவம் குறித்துத் தெரிவித்தபோது, அதிபர் டிரம்ப் அதிர்ச்சியடைந்தார்.
