நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயராக, குர்ஆன் மீது கை வைத்து சோஹ்ரான் மம்தானி பதவியேற்றார்.
நியூயார்க் நகரின் 112வது மேயராக ஸோஹ்ரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலையில் பதவியேற்றார். லோயர் மன்ஹாட்டனில் உள்ள சிட்டி ஹாலுக்கு கீழே உள்ள முன்னாள் சுரங்கப்பாதை நிலையத்தின் ஸ்பானிஷ் ஓடுகள் கொண்ட வளைவுகளுக்கு கீழே நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் மம்தானிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது மம்தானி இரண்டு குர்ஆன் பிரதிகளின் மீது கைவைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
சோஹ்ரான் மாம்தானி, டெமோக்ராடிக் சோசலிஸ்ட் கட்சியினரின் உறுப்பினர், நியூயார்க் நகரில் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் வாக்குறுதிகளுடன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் பதவியேற்றவுடன், நகர அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
உகாண்டாவில் பிறந்த 34 வயதான சோஹ்ரான் மம்தானி, நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயராகவும், முதல் தெற்காசிய மேயராகவும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் மிக இளைய மேயராகவும் ஆகியுள்ளார். அவரது இந்த வெற்றி அமெரிக்க அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகக் கருதப்படுகிறது.
குயின்ஸைச் சேர்ந்த முன்னாள் மாகாண சட்டமன்ற உறுப்பினரான மம்தானி, கடந்த ஆண்டு ஜனநாயகக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்று அரசியல் வட்டாரங்களைத் திகைக்க வைத்தார். அவரது பிரச்சாரம், பணவீக்கம் மற்றும் சாமானிய மக்களின் பாக்கெட்டுகள் மீதான அதிகரித்து வரும் சுமையைக் கையாள்வதை மையமாகக் கொண்டிருந்தது.
மம்தானியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் பிரச்சாரத்தின் போது, மம்தானி பல முக்கிய வாக்குறுதிகளை அளித்தார். ஒரு பொதுவான குழந்தை பராமரிப்புத் திட்டத்தைத் தொடங்குவது, வாடகைக் கட்டுப்பாடு உள்ள சுமார் 2 மில்லியன் குத்தகைதாரர்களுக்கு வாடகையை முடக்குவது, மற்றும் நகரத்தின் பேருந்துகளை ‘வேகமாகவும் இலவசமாகவும்’ மாற்றுவது ஆகியவை இதில் அடங்கும்.
