பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதியும், புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
இவ்விரு மாநிலங்களிலும் தேர்தல் கூட்டணிகள் முடிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, விஜய் தலைமையிலான தவெக, சீமான் தலைமையிலான நாதக என 4 முனைப் போட்டி தற்போதுவரை நிலவுகிறது. இதில் தவெக, பாஜகவுடன் கூட்டணி போடலாம் என்னும் பேச்சும் எழுந்துள்ளது.
இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக பேச்சுவார்த்தைக் குழு முன்னெடுத்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, காங்கிரஸ் கட்சிக்கு 28, ம.தி.மு.கவுக்கு 4, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அதிமுக இடையே இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாகிக் கொண்டிருக்கிறது.
