மேற்கு வங்காளத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள் பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமலாக்கத்துறை (ED) பெரும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சியின் மூன்று வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 440 கோடி ரூபாய் பணத்தை முடக்கியுள்ளது. சமீபத்திய தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சி இரு அணிகளாகப் பிரிந்து செயல்படும் சூழலில், நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக அதிருப்தி அணியினர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கியது.
விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொல்கத்தாவைச் சேர்ந்த கேர்வெல் ஏவியேஷன் நிறுவனத்தின் மூலம் கட்சியின் நிதியைப் பயன்படுத்தி சுமார் 112 கோடி ரூபாய் மதிப்பில் Embraer 600 ரக சொகுசு விமானம் மற்றும் Agusta ரக ஹெலிகாப்டர் வாங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
கட்சியின் பொது நிதியிலிருந்து பணம் செலவழிக்கப்பட்ட போதிலும், இந்த வாகனங்கள் கேர்வெல் நிறுவனத்தின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவை டிஎம்சிக்கே வாடகைக்கு விடப்பட்டதாகக் கணக்குகள் காட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் கட்சியின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் மட்டுமே இந்த சொகுசு வாகனங்களை தனிப்பட்ட முறையில் முழுமையாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், விமானப் பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் வாடகை என்ற பெயரில் கட்சியின் பணம் மீண்டும் அந்த நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. போலி நிறுவனங்கள் வழியாகக் கட்சிப் பணம் தலைவர்களின் தனிப்பட்ட சொத்துகளாக மாற்றப்பட்டதா என்பதை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் கட்சியின் நிறுவனர் மம்தா பானர்ஜி, பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஆகியோரை நேரில் விசாரிக்க சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, கட்சியின் 80 எம்.எல்.ஏக்களில் 58 பேர் அதிருப்தியாளர்களாக மாறி தனித்து செயல்படுகின்றனர். அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் இருப்பதால், அவர்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ரிதர்பா தலைமையில் செயல்படும் இந்த அணி, கட்சியை முழுமையாகக் கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது. முதலில் கட்சி தலைமை அலுவலகத்தை கைப்பற்றிய அவர்கள், கட்சியின் சின்னம் தங்களுக்குச் சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளனர். கட்சியின் அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டதாக அவர்கள் வாதிடுகின்றனர்.
இதை பாஜகவின் சதி என மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். “தைரியம் இருந்தால் பாஜகவில் சேர்ந்து நேரடியாக எதிர்க்கட்டும்” என அதிருப்தியாளர்களுக்கு சவால் விட்டுள்ளார். மம்தா தரப்பு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய விளக்கத்தில், 2022-ல் நடைபெற்ற அமைப்புத் தேர்தல்களுக்குப் பிறகு தற்போதைய தலைமை 2027 வரை செல்லுபடியாகும் எனக் கூறியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சி சின்னத்தைப் பயன்படுத்திய விதத்தையும் மம்தா தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த உள் மோதல் டிஎம்சியின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
