உங்கள் பிள்ளைகள் திடீரென்று ஸ்வீட் கேட்கிறார்கள், ஆனால் வீட்டில் ஸ்வீட் இல்லையா? கவலைப்பட வேண்டாம். வீட்டில் 1/2 கப் சேமியாவும், 1 மூடி தேங்காயும் இருந்தால், அவற்றை கொண்டு அருமையான ஸ்வீட் செய்யலாம்.
இந்த ஸ்வீட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருவேளை உங்கள் வீட்டிற்கு திடீரென்று விருந்தினர்கள் வந்தால், அவர்களுக்கு இதை செய்து கொடுக்கலாம். இந்த ஸ்வீட்டை செய்து கொடுத்தால், நிச்சயம் பாராட்டைப் பெறுவீர்கள். மேலும், உங்கள் பிள்ளைகள் இதை ஒருமுறை சாப்பிட்டால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். இந்த தேங்காய் சேமியாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
தேவையான பொருட்கள்:
* நெய் – 1 டீஸ்பூன்
* சேமியா – 1/2 கப்
* தண்ணீர் – 2 கப்
* உப்பு – 1 சிட்டிகை
* சர்க்கரை – 1 கப்
* ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்
* ஆரஞ்சு ஃபுட் கலர் – 1 சிட்டிகை
* நெய் – 1 டீஸ்பூன்
* முந்திரி – 5 (பொடியாக நறுக்கியது)
* தேங்காய் – 1 மூடி (துருவியது)
* சர்க்கரை – 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் சேமியாவை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
* பின் அதில் 2 கப் தண்ணீர் மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி, சேமியாவை வேக வைக்கவும்.
* சேமியா வெந்ததும், அதில் 1 கப் சர்க்கரை, 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள், 1 சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து கிளறி, வற்றும் வரை வதக்கி ஒரு தட்டில் போட்டு குளிரவைக்கவும்.
* அதே வாணலியில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து உருகியதும், பொடியாக நறுக்கிய முந்திரியை பொன்னிறமாக வறுக்கவும்.
* பின்னர் அதில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
* பின்பு 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கிளறி, வேக வைத்த சேமியாவை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான ஸ்வீட் தேங்காய் சேமியா தயார்.