இந்தியா சார்பில் ஐநா சபையில் பங்கேற்க அனுப்பப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் நடக்கும் ஐநா கூட்டத்தில், இந்தக் குழுவினர் பங்கேற்று, ஆபரேஷன் சிந்துர் குறித்து விளக்க உள்ளனர். இந்த நிலையில் வெளியாகி இருக்கும் பெயர் பட்டியல், பாஜகவின் அரசியல் உத்தியோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
தலைவர்களின் எகோபித்த மரியாதை:
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர், நாட்டின் அரசியல் தலைவர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கிறது. பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கட்சித் தலைவர்கள் பேதமின்றி இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பயங்கரவாதிகளின் அத்துமீறலுக்கும், பதிலடி புரிந்து கொள்ளாமல் தாக்கி போர் சூழலை ஏற்படுத்திய பாகிஸ்தானின் அட்டூழியத்திற்கும் அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். ஆப்ரேஷன் சிந்தூர், பாகிஸ்தானை மிரள வைத்ததோ இல்லையோ, பாஜகவின் செயல்பாட்டால் தலைவர்களை ஒரே அணியில் திரள வைத்தது.

ஏன்? எப்படி?
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியடைந்து இருப்பதாக இந்தியா புல்லரித்துக் கொண்டிருக்கிறது. அந்த நோக்கத்திலேயே போர் முடிந்ததும் மத்திய அமைச்சரவையை கூட்டி முக்கிய ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அடுத்த கட்டமாக, போரின் தீவிரத்தையும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை எதிர்த்து உலக அரங்கில் இந்தியாவின் குரலை பதிவு செய்யவும் திட்டமிட்டது. அதற்காக பல்வேறு வெளிநாடுகளுக்கு நாட்டின் முக்கிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குழுவில் இருக்கும் பெயர் பட்டியலே, பாஜக ஆபரேஷன் சிந்தூரை அரசியல் நோக்கத்தில் பயன்படுத்துகிறதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
கொடுக்கப்பட்டதும் எடுக்கப்பட்டதும்:
ஐநா சபைக்கு அனுப்பப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்களை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு அனைத்து தேசிய கட்சிகளையும் கேட்டது. அதன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளில் இருந்து திமுக சார்பில் இந்த குழுவில் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சுலே, சிவசேனா சார்பில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளார். அதேபோல காங்கிரஸ் தரப்பிலும் குழுவில் பங்கேற்க ஆனந்த் ஷர்மா, கவுரவ் கோகாய், சையது நசீஸ் ஹூசைன், ராஜ் ப்ரார் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பரிந்துரையை ஒரேடியாக நிராகரித்துவிட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரை இணைத்திருக்கிறது மத்திய அரசு.

ஏன் சசி தரூர்?
சசி தரூர் ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றி இருக்கிறார் என்ற நிலையில் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், வேறு சில காரணமும் உள்ளதாக கூறுகின்றன அரசியல் பட்சிகள். அண்மைக் காலமாக சசி தரூருக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸின் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக போட்டியிட்டவர் சசி தரூர். மேலும், பலமுறை அவர் பிரதமர் மோடியை புகழ்ந்து கருத்துகளை தெரிவித்து வந்திருக்கிறார். குறிப்பாக, ஆப்ரேஷன் சிந்தூர் தொடங்கிய போதிலிருந்தே மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்போக்கை காட்டி வந்திருக்கிறார். இதனால், அவரை பாஜக தன் பக்கம் இழுக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.

காங்கிரஸ் – பாஜக கருத்து என்ன?
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், கட்சியை கேட்காமல் உறுப்பினர்களின் பெயர்களை எப்படி தேர்வு செய்யலாம் என்றும் இது காங்கிரசாரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வேலை என்றும் சாடியுள்ளார். மறுபுறம், ராகுல் காந்தி அனுப்பிய பெயர் பட்டியலில் சசிதரூர் போன்ற திறமையானவரின் பெயர் குறிப்பிடப்படாதது சரியல்ல. வெளியுறவு கொள்கைகளில் சசி தரூரின் அனுபவ அறிவு யாராலும் மறுக்கப்பட முடியாதது. இதை நன்கு அறிந்திருந்தும் காங்கிரஸ் சசி தரூரின் பெயரை குறிப்பிடாதது முற்றிலும் காங்கிரஸ் தலைமைகளின் பொறாமையின் வெளிப்பாடு என்றும் விமர்சித்துள்ளனர். சசி தரூர் மீது பாஜகவினர் காட்டும் இந்த திடீர் பாசம் பாஜகவுக்கு பலன் அளிக்குமா என்பது விடையறியா கேள்வியாக ஏஞ்சுகிறது.