தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டமும் ஒன்று. பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இந்த திட்டம். ஒவ்வொரு ஆண்டும் இதற்காக சுமார் ரூ.1000கோடி வரை அரசு செலவிட்டு வருகிறது. முதன்முதலில் 2019-ம் ஆண்டு டெல்லியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து 2021-ம் ஆண்டில் பஞ்சாப்பும், தமிழக அரசும் மகளிருக்கு பேருந்துக்கு இலவச பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அதையடுத்து கேரளா, தெலங்கானா, கர்நாடகா, ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 8-வது ஆந்திராவும் இணைந்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக பதவியேற்ற பிறகு, ஒவ்வொரு வாக்குறுதிகளையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், ஆந்திரப் பிரதேசத்தில் பெண்கள் ஆகஸ்ட் 15 முதல் அரசு நடத்தும் APSRTC பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க முடியும் என அறிவித்துள்ளார். ஸ்வர்ண ஆந்திரா – ஸ்வச் ஆந்திரா திட்டத்தில் பங்கேற்க கர்னூலுக்கு சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு இலவச பேருந்து பயணத் திட்டத்தை அவர் அறிவித்தார்.
அதன்படி வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஆந்திராவிலும் மகளிர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் சராசரியாக மாதந்தோறும் ரூ.500 சேமிக்க முடிவதாக கூறப்படுகிறது.