2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுகவுடன் கைகோத்து சந்திக்கக் களமிறங்கி இருக்கும் பாஜக, அண்ணாமலை பாணி அரசியல் செய்யவே கூடாது என்று முடிவெடுத்திருக்கிறது. பாஜகவின் ஊடகப் பிரிவினருடன் நடந்த ஆலோசனையின் அக்கட்சியின் தற்போதைய மாநில தலைவர் கராராகத் தெரிவித்திருக்கிறார்.
அதென்ன அண்ணாமலை பாணி அரசியல்?
நாடு முழுவதிலும் பல மாநிலங்களில் முக்கிய கட்சியாகத் திகழும் பாஜக, தமிழ்நாட்டிற்குள் அசைக்க முடியாத அஸ்திவாரத்தை ஏற்படுத்த கடந்த 20 ஆண்டுகளாக மும்முரமாக உழைத்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் அதில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. வரிசையாக வந்த பாஜக மாநில தலைவர்கள் அனைவருக்கும் அந்த அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் அதில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர் அண்ணாமலை. 2021-ம் ஆண்டு அப்போதைய பாஜக மாநில தலைவர் எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சராகப் பதவி வழங்கப்பட்டதும், அப்பதவிக்கு அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்ததுபோல் பிம்பம் உருவானது. அதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் மிக முக்கிய காரணம் அண்ணாமலை பராமரித்த சமூக ஊடக வார் ரூம் அமைப்புதான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
என்ன செய்தது அண்ணாமலையின் வார் ரூம்?
சமூக ஊடகங்களில் அண்ணாமலையின் நேரடிக் கட்டுப்பாட்டில் 20-க்கும் மேற்பட்ட கணக்குகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவை தொழில்நுட்பப் புலத்தில் மிக வேகமாக இயங்கின. திமுக அரசு மட்டுமின்றி அதிமுகவையும் சரமாரியாக விமர்சித்து அண்ணாமலையின் கருத்துகளை அந்தப் பக்கங்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரப்பின. திமுக ஐடி விங்கோடு பாஜக ஐடி விங் நேரடியாகவே போட்டியிட்டது. இதனால் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வரும் தமிழக மக்கள் மத்தியில் பாஜக வேகமாக வளர்ந்து வரும் தோற்றம் ஏற்பட்டது.
வார் ரூம் பாஜகவுக்கு நல்லது செய்ததா?
ஒருபுறம் வார் ரூம் அமைப்பு பாஜகவை மக்கள் மத்தியில் அதிகம் பரப்பியது போல் தெரிந்தாலும் உண்மையில் அவை அண்ணாமலையைத்தான் அதிகம் வெளிக்காட்டின என்கின்றனர் பாஜகவில் சிலர். அண்ணாமலை ஆதரவு வார் ரூமாக மட்டுமே அதை அவர் பார்த்துக் கொண்டார் என்று குற்றம் சாட்டுகின்றனர். இதை பாஜகவிலிருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் அண்ணாமலைக்கு நெருக்கமாக இருந்த சூரியா சிவா ஆகியோரே வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளனர். பாஜகவில் வார் ரூம் இருப்பது உண்மைதான் என்று வினோஜ் பி செல்வமும் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அதிமுக பிரிந்ததில் இருந்து அந்த வார் ரூம் கணக்குகளின் அட்டகாசம், பாஜகவினர் மீது அதிமுகவினர் இடையே வெறுப்பைத்தான் அதிகம் சம்பாதித்தது என்றும் கமலாலயத்துள் கிசுகிசுக்கப்படுகிறது. திமுகவை வெளிப்படையாக விமர்சிப்பது போல் அதற்கு முன் பாஜகவினர் யாரும் அதிமுகவினரை விமர்சித்தது இல்லை. ஆனால் அண்ணாமலை அந்த எல்லைகளை உடைத்தெறிந்து தமக்கு எதிரான கருத்து உள்ள அனைவரையும் அதில் விமர்சித்தார். ஒத்த கருத்துகள் உள்ளவர் யாராக இருந்தாலும் ஆதரித்தார். இது கட்சியின் நிலைப்பாட்டைக் குலைத்தது என்றெல்லாம் ஒன்றுக்கு இரண்டாகச் சிலர் கட்சித் தலைமைக்குப் போட்டுக் கொடுத்திருக்கின்றனர். மேலும் அண்ணாமலைக்கு வந்த லைக்குகள் எதுவும் வாக்குகளாக மாறவில்லை என்றும் ஏற்றி விட்டிருக்கின்றனர்.
இனி வார்ரூம் அரசியல் பாஜகவுக்கு இல்லை
இந்நிலையில் தற்போது மீண்டும் பாஜகவுடன் அதிமுக கை கோத்திருக்கிறது. ஒருபுறம் களத்தில் செயல்பாடுகளைக் குறித்து இருகட்சித் தலைமைகளும் ஆலோசிக்கும் அதே நேரத்தில், பாஜக ஆதரவுடன் இயங்கும் சமூக ஊடங்களில் பரவிய அதிமுக மீதான விமர்சனங்களுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என்றும் குடைந்திருக்கிறார்கள். இதனால் வெறுப்பான தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்தரன், நேற்று சென்னை கமலாலயத்தில் பாஜக ஊடகப் பிரிவினருடன் அவசரக் கூட்டம் நடத்தினார். அதில் அண்ணாமலை செய்தது போல் பாஜகவில் இனி வார் ரூம் அரசியல் எல்லாம் தேவையில்லை என்று ஒரே போடாகப் போட்டுள்ளார்.
அது மட்டுமன்றி 15-க்கும் மேற்பட்ட கணக்குகளின் பட்டியலை வெளிப்படையாகக் காட்டி “இதெல்லாம் அண்ணாமலைக்கு ஆதரவாகச் செயல்பட்டு அதிமுக தலைவர் உட்பட பலர் மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வரும் கணக்குகள். இனி பாஜகவிலோ அதன் கூட்டணிக் கட்சிகளிலோ உள்ள தனிப்பட்ட தலைவர்களை ஊக்குவிக்கவோ, இழிவுபடுத்தவோ கூடாது.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் குறிப்பிட்ட அந்தக் கணக்குகள் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
ஓரங்கட்டப் படுகிறாரா அண்ணாமலை?
பாஜக தலைவராக 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு முதல்வர் வேட்பாளார முன்னிறுத்தப் படுவார் என்றெல்லாம் கனவு கண்ட அண்ணாமலை திடீரென பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்தக் கடுப்பைக் காட்டும் விதமாக அண்மையில் பாஜகவின் எந்த நிகழ்ச்சிக்கும் தலையைக் காட்டாமல் இருக்கிறார். அவர் பின்புலத்தில் தன் ஆதரவு சமூக ஊடகங்களைத் தூண்டிவிட்டு கூட்டணிக்குக் குழப்பம் விளைத்துவிடக் கூடாது என்பதற்காக நயினார் நாகேந்திரன் இந்த அடியை எடுத்து வைத்திருக்கிறார் என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆனாலும் அண்ணாமலை சமூக ஊடகத்தைக் கொண்டு ஏற்படுத்திய மாற்றத்தைப் புறந்தள்ளிவிட முடியாது என்றும் கூறுகின்றனர்.