பீகாரின், பாட்னாவில் நடைபெற்ற மாநில அளவிலான கோ விளையாட்டுப் போட்டியில், கோவை சேர்ந்த தமிழ்நாடு கோ-கேம் அசோசியேஷன் மாணவ, மாணவியர் 16 மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்களுடன் மோதி, ஒரு தங்கம் மற்றும் நான்கு வெள்ளிப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்து உள்ளனர்.
இப்போட்டியில் மூன்று மாணவிகளும் இரண்டு மாணவர்களும் என மொத்தம் ஐந்து பேர் தமிழகம் சார்பில் பங்கேற்றனர். கடுமையான பயிற்சிக்குப் பிறகு கள மிறங்கிய இவர்கள், ஜூனியர், சப்-ஜூனியர் மற்றும் சீனியர் என மூன்று பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடினர். அதில் கோவை போத்தனூர் ரயில்வே பள்ளி மாணவி சம்ரிதா தங்கப் பதக்கம்மும், சுந்தராபுரம் பகுதியில் உள்ள செங்கோட்டையன் பள்ளி மாணவி லக்ஷனா, மதுசுந்தராபுரம் பகுதியில் உள்ள விக்னேஸ்வரா மேல்நிலைப் பள்ளி மாணவி அபி மற்றும் மாணவர் சஞ்சய் ஆகிய நான்கு மாணவர்களும் வெள்ளிப் பதக்கமும் வென்று உள்ளனர்.
சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிகளில் 23-வது இடத்தைப் பிடித்து உள்ள கோ விளையாட்டு, இந்தியாவில் மேலும் பிரபலம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெற்றிவாகை சூடி போத்தனூர் ரயில் நிலையத்திற்கு வந்த மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இத்தகைய வெற்றிகள் தமிழகத்தில் கோ விளையாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பயிற்சியாளர் கூறும் போது :
கோ கேம் என்பது 2500 ஆண்டுகளுக்கு முன்பு சைனாவில் வந்ததாகவும், அவர்கள் விசு, பதுக்கா என்று அழைப்பதாகவும், இது சதுரங்க போட்டி போன்று மூளைக்கான விளையாட்டு என்றும், இந்த கோ கேம் விளையாட்டை ஊக்கப்படுத்த நண்பர்கள் மூலம் மாணவர் ஒருவருக்கு பயிற்சி அளித்ததாகவும், அவரை வைத்துக் கொண்டு இத்தனை பேரை உருவாக்கியதாக தெரிவித்தார். இந்த விளையாட்டுகளை அங்கீகரித்ததற்கு பின்னர் அரசு இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு உதவிகள் செய்தால் இன்னும் முன்னேறலாம் என்று கோரிக்கை விடுத்தார்.
தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்க உள்ள கல்லூரி மாணவர் கதிர் இது குறித்து கூறும் போது :
இந்த விளையாட்டு போட்டிகளில் மூன்றாண்டுகளாக தொடர்ந்து பங்கு பெற்று வருவதாகவும், எட்டு பேர் கொண்ட குழுவாக அவர்கள் சென்றதாகவும், இரண்டு தங்கப் பதக்கம், மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கம் வென்று வந்ததாகவும் கூறினார். அரசு மேற்கொண்டு உதவி செய்தால் மேலும் பல மாணவர்கள் இந்தப் போட்டியில் பதக்கம் வெல்வார்கள் என்றார்.