திருச்சி மாநகராட்சியுடன், குண்டூர் ஊராட்சியை இணைப்பதற்கு இறுதி முடிவு எடுக்கும் முன், கிராம மக்களின் எதிர்ப்பு மனுக்களை , முறையாக பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக ஆளுநரின் செயலாளர், நகராட்சி நிர்வாக துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
திருச்சி குண்டூரை சேர்ந்த மரிய மைக்கேல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்டூர் கிராம ஊராட்சியை , திருச்சி மாநகராட்சியுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசின் இந்த முடிவை , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டு உள்ளது.
மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் தற்போது சுமார் 1800 பயனாளிகள் பயன்பெற்று வருகிறோம். இது முற்றிலும் தடைபடும். எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.மேலும் கடந்த 15.08.2024 அன்று கிராம சபை கூட்டத்தில் குண்டூர், திருவளர்ச்சிப்பட்டி, அய்யம்பட்டி, அயன்புத்தூர் கிராம மக்கள் ஒன்று கூடி, குண்டூர் கிராமத்தே மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். எனவே, குண்டூர் கிராமத்தை மாநகராட்சியாக மாற்றுவதற்கு எங்களின் ஒட்டுமொத்த ஆட்சேபணையை அரசுக்கு தெரிவித்து மனு அனுப்பி உள்ளோம். அதை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட த்தின் 3(2)(c) இன் படி, கிராம மக்களின் ஆட்சேபனை மனுவை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை , குண்டூர் கிராம மக்களின் ஆட்சேபனை மனுவை 2 வாரங்களில், ஆளுநரின் செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.
இறுதி உத்தரவை பிறப்பிக்கும் முன், கிராம மக்களின் ஆட்சேபனை மனுவை முறையாக பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும், தமிழக ஆளுநரின் செயலாளர், நகராட்சி நிர்வாக துறை செயலாளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.