தமிழ்நாட்டில் சில கல்லூரிகள் அவசர அவசரமாக நிகர்நிலை அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளன. பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் அங்கீகாரத்தின் மூலம் பல்கலைக்கழகம் ஆகி முழுமையான தன்னாட்சி பெற விரும்புகின்றன. இதைக் கவனிக்கும் கல்வியாளர்கள், தமிழ்நாடு அரசு தனது தனியார் பல்கலைக்கழக சட்ட விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு என்பதை விரிவாகப் பார்ப்போம்.
நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்றால் என்ன?
சிறந்த கல்வித் தரத்தை வெளிப்படுத்தும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவால் வரையறுக்கப்பட்ட அளவுகோல்களை நிறைவேற்றி, விண்ணப்பிக்கும்போது மத்திய உயர்க்கல்வி அமைச்சகம் அங்கீகாரம் வழங்குவதன் மூலம் பல்கலைக்கழகமாக தரம் உயர்கின்றன. இவற்றையே நம் நாட்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்று குறிப்பிடுகிறோம்.
நிகர்நிலைப் பல்கலைக்கழகம் Vs அரசுப் பல்கலைக்கழகம்
- அரசுப் பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநில அரசுகள் சட்டமன்றத்தில் உருவாக்கும் மசோதாக்களின் வாயிலாக உருவாக்கப்படுபவை. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய உயர்க்கல்வி அமைச்சகம் சட்டப்பிரிவு 3-ன் மூலம் அங்கீகாரம் வழங்குவதால் உருவாக்கப்படுபவை.
- நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்குப் பெரும்பாண்மை சுயாட்சி வழங்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், பாடத்திட்டங்களை வகுப்பது போன்ற நடவடிக்கைகளில் யாருடைய தலையீடும் இல்லாமல் செயல்படும் உரிமை வழங்கப்படுகிறது. ஆனால், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் வலியுறுத்தப்படும். பெரும்பாலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளே இருக்கும்.
- அரசுப் பல்கலைக்கழகங்கள், அந்தந்த மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப செயல்படும். அவற்றின் அதிகாரம் முழுவதும் மாநில அரசின் கைகளில் இருக்கும். சில மாநிலங்கள் கல்விக் கட்டண விவகாரத்தில் கட்டுப்பாட்டுடன் செயல்படலாம், சில மாநிலங்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் கவனம் செலுத்தலாம். அந்தந்த மாநிலத்தின் அரசுப் பல்கலைக்கழகங்கள், அதன் குறிக்கோளுடன் செயல்படும்.
- நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு தன்னிச்சையாக வேந்தர், துணை வேந்தர் உள்ளிட்ட அதிகாரத் தலைமைகளை நியமிக்கும் உரிமை உண்டு. அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தர், துணை வேந்தர் நியமன உரிமை குறிப்பிட்ட மாநிலத்தின் ஆளுநரின்வசம் இருக்கும். அரசுப் பல்கலைக்கழக வேந்தர்களுக்குத் தலைமையாக ஆளுநர் செயல்படுவார்.
என இவை இரண்டுக்குமான வேறுபாடுகள் பலவற்றைப் பட்டியலிடலாம். மொத்தத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழக அங்கீகாரம் கிடைத்தால் முழுமையான சுயாட்சி கிடைக்கும். இதனாலேயே பல பல்கலைக்கழகங்கள் நிகர்நிலை அந்தஸ்து பெற விரும்புகின்றன.
தமிழ்நாடு அரசும் தனியார் பல்கலைக்கழகங்களும்
தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என 3 வகையான உயர்க்கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் குறிப்பாக தனியார் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் வகையில் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதில் ஒரு பல்கலைக்கழகம் உருவாகத் தேவையான அளவுகோல்கள் உட்பட அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கூட 8 பல்கலைக்கழகங்களை யுஜிசி அங்கீகாரம் பெற்ற பல்கலைகளின் பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே இந்தச் சட்டத்தில் குறைந்தது 100 ஏக்கர் நிலம் இருந்தால்தான் பல்கலை தொடங்க முடியும், ரூ.100 கோடி வைப்புத் தொகை இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிகள் இருக்கின்றன. அவைதான் இப்போது பிரச்னை என்கிறார்கள் கல்வியாளர்கள்.
சிக்கல் என்ன?
தற்போது தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்லூரிகள் பல, நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற விண்ணப்பித்துள்ளதாகத் தெரியவருகிறது. கோவை நேரு ஏரோனாட்டிகல் கல்லூரி, ராஜலக்ஷ்மி கல்லூரி, பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகள் அந்த முயற்சியின் பல்வேறு கட்டங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 40 கல்லூரிகள் இந்தப் பட்டியலில் உள்ளன. இவையெல்லாம் நிகர்நிலை அந்தஸ்து பெற்றுவிட்டால் யுஜிசியின் விதிமுறைகளுக்குக் கீழ் வரும். மேலும் மத்திய உயர்க்கல்வி அமைச்சகம் நேரடி ஆதிக்கம் செலுத்த வாய்ப்பிருக்கிறது. இவை இரண்டையும் கடந்து, முழுமையான சுயாட்சி உரிமை கிடைக்கும். இதெல்லாம் சிக்கலாகப் பார்க்கப்படுகிறது.
“தனியார் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகிவிட்டால் உயர்க்கல்வியில் அரசின் கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டிய தேவை இல்லாமல் போகும். அனைத்து தரப்பு மாணவர்களின் உயர்க்கல்விக் கனவை உறுதிப்படுத்தும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அவை தொடர வேண்டிய அவசியம் இருக்காது. கல்விக் கட்டணம், பேராசிரியர்கள் நியமனம் என பல விதங்களில் சிக்கல் ஏற்படும்” என்கின்றனர் கல்வியாளர்கள். “தமிழ்நாடு அரசு தனது தனியார் பல்கலை உருவாக்கும் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து, பல தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக வழிவகை செய்தால், மாணவர்களின் கல்விக்குப் பயனுள்ளதாக அமையும்” என்றும் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக 100 ஏக்கர் நிலம் என்ற அளவுகோலை 50 ஏக்கர் நிலம் என்று குறைக்கலாம். உத்திரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் ரூ.10 கோடி வைப்புநிதி + நிலம் உள்ளிட்ட அளவுகோல்களைச் சுட்டிக்காட்டுகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் அரசு இதில் கவனம் செலுத்துமா என்பது கவனிக்கத்தக்க கேள்வியாக எஞ்சுகிறது.