தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், இன்று காலை மதுரை வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 11:45 மணிக்கு புறப்பட்ட அவர், மதியம் 1:05 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் பெரியசாமி, நேரு, தங்கம் தென்னரசு, மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், தியாகராஜன், எம்.பி. டி.ஆர். பாலு, மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மாநகராட்சி ஆணையர் சித்ரா ஆகியோரும் வரவேற்பு வழங்கினர். முதலமைச்சர் தொண்டர்கள் அளித்த வேஷ்டி மற்றும் சால்வைகளை அன்புடன் பெற்றுக் கொண்டார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், 6,500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10,000 பேர் பங்கேற்க உள்ளனர். தேர்தலை முன்னிறுத்தி நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அவனியாபுரத்தில் இருந்து ஆரப்பாளையம் திருமலை நாயக்கர் சிலை வரை 22 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த ரோடு ஷோ திட்டமிடப்பட்டுள்ளது. ரோடு ஷோவின் முடிவில், முன்னாள் மேயர் முத்து சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.