ஆகஸ்ட் 10-ல் பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடத்தப்படும் என்று பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த மாநாட்டிற்கு அன்புமணி உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாமகாவில் தலைவர் ராமதாசுக்கு, செயல் தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் மேடையிலேயே இருவரும் பரஸ்பரம் மோதிக் கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் தனது பெயரன் பரசுராமன் முகுந்தனை, பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். நான்தான் கட்சியை தொடங்கினேன், விருப்பமுள்ளவர்கள் கட்சியில் இருக்கலாம், இல்லை வெளியேறலாம் என ராமதாஸ் கடுமையாக பேசினார். உடனே பனையூரில் தான் புதிய அலுவலகம் திறப்பதாக அன்புமணி எதிர்சவால் விடுத்தார்.
கடந்த ஏப்ரல் 10-ந் தேதி தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பாமகவின் தலைவராக இனி நானே செயல்பட போவதாக அறிவித்தார். அன்புமணி வெறும் செயல் தலைவர் என்றும் கூறினார். இது அக்கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்பை உண்டுபண்ணியது. இந்நிலையில் மே மாதம் 11-ந் தேதி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் பாமக சார்பில் வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடத்தப்பட்டது. அன்புமணி முன்னின்று நடத்திய இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அதில் பேசிய ராமதாஸ், இது நான் உருவாக்கிய கட்சி, என் விருப்பத்திற்கு மாறாக இருப்பாரை கடலில் தூக்கி வீசி விடுவேன் என்றார். மறுநாள் அவர் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மொத்தமுள்ள 102 பேரில் வெறும் 8 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தருமபுரியில் பாமக நிர்வாகி இல்ல விழாவில் பேசிய அன்புமணி, கடந்த ஒரு மாதமாக தான் கடும் மன உளைச்சலில் இருப்பதாக குறிப்பிட்டார். எதற்காக தான் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன் என்று தெரியவில்லை என வருத்தத்துடன் கூறினார். இந்நிலையில் கடந்தவாரம் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி குறித்து வெளிப்படையாக பல குற்றச்சாட்டுக்களை பட்டியலிட்டார். அதாவது அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியது தன்னுடைய தவறு என்றார். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று தான் திட்டமிட்டபோது, அன்புமணியும், சௌமியாவும் காலில் விழுந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என நிர்பந்தத்தாக குற்றஞ்சாட்டினார். மேலும் அன்புமணி ஆதரவாளர்கள் பலரை கட்சி பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சென்னையில் போட்டிக் கூட்டம் நடத்திய அன்புமணி, 2026 சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக செயல்படும் விதமாக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். தேர்தல் ஆணைய விதிகளின்படி தான்தான் உண்மையான பாமக தலைவர் என்றும் கூறினார்.
இந்தசூழ்நிலையில் தான் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடத்தப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். இதில் அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தந்தை – மகன் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த கூட்டணியில் பாமக இடம்பெறும், யார் கூட்டணி பேச்சுவார்த்தையை முன்னெடுப்பார்கள் என்ற கவலை அக்கட்சி நிர்வாகிகளை சோர்வடையச் செய்துள்ளது.