நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் சட்டப்படி நீட்டிக்கப்பட்டுள்ளதாக, சங்க பொதுச் செயலாளர், நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவித்து, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் முடிவுகளின்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறி, நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை செல்லாது என்றும் சட்ட விரோதமானது என்றும் அறிவிக்க கோரி நம்பிராஜன் என்ற உறுப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில், நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால், பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடந்த போதும், வழக்குகள் காரணமாக 2022ம் ஆண்டு தான் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். இடைப்பட்ட மூன்று ஆண்டு காலத்தில் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை எனவும், நடிகர் சங்க புது கட்டட கட்டுமான பணிகளும் பாதிக்கப்பட்டு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வங்கியில் கடன் பெற்றும், மூத்த நடிகர்களிடம் நிதி பெற்றும், 2024 ம் ஆண்டு கட்டுமான பணிகள் துவங்கி, 85 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த சூழலில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் பட்சத்தில், கட்டுமான பணிகள் கிடப்பில் போட வாய்ப்புள்ளதால், நிர்வாகிகள் பதவிக்காலத்தை நீட்டித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.
எந்த கூட்டத்திலும் பங்கேற்காத மனுதாரர், வேறு சிலரின் தூண்டுதலில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், சட்டப்படி நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் நடிகர் விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி குமரேஷ் பாபு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.