பாசன கிணற்றில் அபாயகரமான ரசாயன கழிவுகளை கொட்டி, நிலத்தடி நீரை மாசடைய செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை, சூலூர் அருகே பீடம்பள்ளியில் உள்ள ஒரு பாசன கிணற்றில் கடந்த சில மாதங்களாக 500 லாரிகளுக்கு மேலாக பவுண்டரியில் இருந்து வெளியேறும் அபாயகரமான ரசாயன கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
இதனால் அருகே உள்ள விவசாய நிலங்கள் சுற்றுப்புற கிராம மக்கள், கால்நடைகள் மற்றும் அருகில் செல்லும் நீரோடைகள் மாசடைந்து பாதிக்கப்பட்டு உள்ளன.
ரசாயன கழிவுகள் காற்றில் கலந்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் பரவி மண்வளம், பாதிக்கப்பட்டு, விவசாய பணி மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
அண்மையில் பெய்த மழை நீரோடு இந்த ரசாயன கழிவுகள் கலந்து நிலத்தடி நீரை மாசுபடுத்தி உள்ளது. இந்த ரசாயன கழிவு நீர் கனமழை பெய்யும் காலங்களில் விவசாய நிலங்களில் உள்ள நீரோடை வழியாக பிரதான ஓடையில் கலந்து பீடம்பள்ளி, நடுப்பாளையம், பள்ளபாளையம், கண்ணம்பாளையம் மற்றும் சூலூர் வழித் தடங்களில் உள்ள நீர்த்தேக்கத்தில் கலந்து நொய்யல் ஆற்றில் கலக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பீடாம்பள்ளி ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் சார்பாக மேலும் இரசாயன கழிவுகளை கொட்டுவதில்லை, என ஊராட்சி அலுவலகம் வாயிலாக மக்களிடம் உறுதி அளித்தனர்.
இச்சூழலில் இரண்டு வார கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 2 ஏக்கர் பரப்பளவு 4 அடி உயரத்தில் கழிவுகளை கொட்டி, மாசு ஏற்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பீடம்பள்ளி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து உள்ளனர்.