கோவையில் புகழ்பெற்ற தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக குடமுழக்கு நடைபெற்றது.
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, நினைவுத் திருமஞ்சனம், எண் வகை மருந்து சாற்றுதல், இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு, திருமுறை, நாட்டிய விண்ணப்பம் உள்ளிட்டவை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை திருப்பள்ளி எழுச்சி, மூல மூர்த்திகளுக்கு ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி, திருக்குடங்கள் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றதை தொடர்ந்து ராஜகோபுரம், விமானங்கள், பரிவாரங்கள், மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி மற்றும் நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும், சமூக ஆர்வலருமான எஸ்.பி.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.