கொடைக்கானலில் நல்ல பனிமூட்டம் நிலவி வருவதால், இரண்டு நாட்கள் ஓய்வு எடுப்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், திரைப்பட நடிகருமான கமல்ஹாசன் அங்கு சென்றுள்ளார்.
‘மலைகளின் இளவரசி’ என்று செல்லமாக அழைக்கப்படும் கொடைக்கானலில், தற்போது கடும் குளிரும், பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதனால், தன் வசம் வசீகரித்து இழுக்கும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இந்த நேரத்தில் கொடைக்கானலுக்கு வருகை தருவது வழக்கம்.
அதன்படி, பல நாடுகளுக்கு ஓய்வுக்காக சுற்றுலா செல்லும் நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், கொடைக்கானல் அழகை ரசிக்க இரண்டு நாட்கள் அங்கு சென்றிருக்கிறார். தனது சொந்தத் தோட்டத்தில் நேற்று பகல் முழுவதும் ஓய்வெடுத்த அவர், இன்று காலையில் இருந்து கொடைக்கானலின் அழகிய கிராமப்புறச் சாலைகளில் கார் மூலம் உலா வந்தார்.
குறிப்பாக, வில்பட்டி சாலைப் பகுதி, பிரபலமாகி வரும் பெப்பர் அருவி செல்லும் வழித்தடம் உள்ளிட்ட இடங்களில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி காரில் கமல் சுற்றிப்பார்த்தார். அவர் மலைப்பகுதியின் அமைதியையும், குளுமையான சூழலையும் முழுமையாக அனுபவித்ததாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னர், கொடைக்கானலில் தங்கியிருந்த நண்பர்களுடன் சிறிது நேரம் உரையாடிய கமல்ஹாசன், இன்று மாலை கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு சென்னை செல்கிறார்.
நடிப்பு, அரசியல் என பல்வேறு பொறுப்புகளுடன் பரபரப்பாக இயங்கி வரும் கமல்ஹாசன், அவ்வப்போது இயற்கைச் சூழலில் ஓய்வெடுத்து வருவது வழக்கம். இம்முறை கொடைக்கானலின் குளிர் வானிலையை முழுமையாக அனுபவித்துவிட்டு அவர் சென்னை திரும்புகிறார்.
பொதுவாக கொடைக்கானலில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு இருக்கும். அதேபோல தற்போதும் காலை முதல் மாலை வரை பனிபோர்த்திய இடமாக கொடைக்கானல் காட்சியளிப்பதாக சுற்றுலாப் பயணிகள் சிலாகித்து வருகின்றனர். மேலும், கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஊர்ந்து செல்வதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
