தமிழ்நாட்டில் தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலத்தை சேர்ந்த பெரும் தொழிலதிபர் பாஸ்கரனின் மகன் இந்த ஆகாஷ் பாஸ்கரன். துணை முதலமைச்சர் உதயநிதியின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் ’கவின்கேர்’ குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் 3-வது மகள் தாரணியை திருமணம் செய்து கொண்டார் ஆகாஷ் பாஸ்கரன். இவர்களது திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி ஆகியோர் முன்நின்று நடத்தி வைத்தனர். அத்தோடு இந்த திருமணத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், தனுஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஆர்.ரவிக்குமார், சிவகார்த்திகேயன், அட்லி, அனிரூத் உள்ளிட்ட திரைபிரபலங்களும் கலந்து கொண்டனர்.

சினிமாவில் தனது முத்திரையை பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ’DAWN PICTURES’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் ஆகாஷ் பாஸ்கரன். திருமணத்திற்கு பிறகு ’தனுஷ் நடிக்கும் இட்லிக்கடை’, ’சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி’, ’சிம்புவின் 49-வது படம்’ என வரிசையாக பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரித்து வருகிறார் ஆகாஷ் பாஸ்கரன். ’இட்லிகடை’ திரைப்படம் பொருளாதார சிக்கலில் இருந்த போது, அதனை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ஆகாஷ்.

அதேப் போல, சுதா கொங்கராவின் ’பராசக்தி’ படத்தை பெரும் நட்சத்திர பட்டாளத்தை வைத்து ரூ.200 கோடி பட்ஜெட்டில் ஆகாஷ் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் ரூ.450 கோடி முதல் ரூ.500 கோடி வரை செலவழித்து திரைப்படங்களை எடுத்து வருவதால் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தேனாம்பேட்டை கே.பி.என் தாசன் சாலையில் ஆகாஷ் பாஸ்கரன் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை நடந்து வருவதாக தெரிகிறது.
