‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் சனிக்கிழமை பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதில் விஜய் தனது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் தரவிருப்பதாக சொல்லப்படுகிறது.
வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜனநாயகன் திரைப்படமே நடிகரும் தவெக தலைவருமான விஜயின் கடைசி திரைப்படம் என கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் அடுத்த பாடலான செல்ல மகளே பாடலை படக்குழு வெளியிட்டது. இதனை விஜய் பாடி உள்ளார். விவேக் இந்த பாடலை எழுதி உள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி இந்த படம் திரைக்கு வருகிறது.இதற்கிடையே, அரசியல் கட்சி தொடங்கிய விஜய், ஜனநாயகனை தனது கடைசி படமாக அறிவித்தார். இந்நிலையில் தான் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடைபெறும் நிலையில் தனது தாய் ஷோபாவுடன் தனி விமானம் மூலம் விஜய் அங்கு விரைந்தார். மலேசியா விமான நிலையத்தில் விஜயை பாரம்பரிய நடனமாடி இளஞ்சிறார்கள் வரவேற்றனர்.
இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் அட்லி, நெல்சன் உள்பட திரைத்துறையினரும், தவெகவினரும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மலேசியா விரைந்தனர். இதனிடையே, ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் சார்ந்த பேனர், போஸ்டர், துண்டு, ஆடை, குடை, கேமரா உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்துச் செல்லகட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மலேசியா சென்றுள்ள நடிகர் விஜய், விமான நிலையத்தில் உற்சாகமாக காணப்பட்டார். விமான நிலையத்தில் விஜயை பாரம்பரிய நடனமாடி இளஞ்சிறார்கள் வரவேற்றனர். விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடி விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு செல்லும் வழிநெடுகிலும் ரசிகர்கள் திரண்டிருந்தனர். இரவில் ஹோட்டலின் வாயிலில் காத்திருந்த ரசிகர்களை விஜய் சந்தித்தார்.
முன்னதாக, அவருடன் படக்குழுவினர் தனி விமானத்தில் வந்திறங்கினர். மேலும், விஜயின் பெற்றோர், இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர். புக்கிட் ஜலீல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தளபதி கச்சேரி கான்செர்ட்டும், தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே தான் விழாவில் தனது ரசிகர்களுக்கு விஜய் சர்ப்ரைஸ் அளிக்க இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் மேடையில் தோன்றி பாடல் பாடவிருக்கிறார் என்பது தான். விஜய் பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். எனினும், விழா மேடையில் விஜய் பாடுவது என்பது அரிது.
தனது கடைசி திரை மேடை என்பதால் இன்றைய நாளில் தனது ரசிகர்களுக்காக விஜய் ஒரு முழுநீள பாடலை பாடலாம் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர். அது ஒரு பாடலாக இருக்கலாம் அல்லது பல பாடல்கள் அடங்கிய தொகுப்பாக இருக்கலாம் என்பது விஜய் ரசிகர்களுக்கான சர்ப்ரைஸ் என்கிறது சினிமா வட்டாரம். இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மையானது என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்
