ராமயாணம், மகாபாரத புராணங்களை நம்மால் நவீன சமூகத்திற்கு ஏற்ப மாற்ற முடியுமா?? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்றால்.?? சாதிய படிநிலையை முற்றும் முழுவதுமாக நீக்கிவிட்டு கொடுக்க முடிந்தால் ஒரு வேளை அது சரியாக வரும் என்று தோன்றுகிறது. ஆனால் அதற்கு பார்ப்பனியம் உடன்படுமா ???!என்றாலும் இடைநிலை சாதிகள் அதில் உடன்படுமா?? என்கிற சந்தேகம் இருக்கதான் செய்கிறது. சோற்றுக்கு வழி இல்லையென்றாலும் தங்களை இன்னும் சத்ரியர்கள் என்று பெருமைப் பட்டுக்கொண்டு இருக்கும் சமூகத்திடம் அதை எதிர்பார்க்க முடியுமா ?? சரி விஷயத்திற்கு வருவோம்..
மணிரத்தினம் இயக்கிய “தளபதி “மகாபாரதத்தை மருவி எடுக்கப்பட்டது படம் . கர்ணன் – துரியோதனனை மையப்படுத்தி இருந்தாலும் குந்தியின் கதாபாத்திரத்தை முதன்மை கருவாக இயக்குநர் மணிரத்னம் உலவவிட்டு இருப்பார். இன்னும் சொல்லப்போனால் தாய் செண்டிமெண்டில் உச்சம்! தளபதி படத்தின் ஸ்ரீவித்யா பாத்திரம். அதைப்போல ஓர் பிரதி எடுத்து மகாபாரதத்தின் முதன்மை பாத்திரமான கிருஷ்ணன் பாத்திரத்தை கொண்டு வந்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
“ரெட்ரோ” மாயக்கண்ணனுக்கு நேரெதிர் பாத்திரம் சிரிக்க தெரியாத வன்முறையில் அதிக நாட்டம் கொண்ட அதே நேரத்தில் ருக்மணியின் மீது அதீத காதலில் அவளை தேடிப்போக தான் யார் ? தன்னுடைய தம்மத்தின் நோக்கம் என்ன? என்று பல சுற்றுகள் சுற்றி நமக்கு ஞானத்தை தருகின்றனர் சூர்யாவும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும்.
மேற்கத்திய சினிமாக்கள் குறிப்பாக இயக்குநர் டேரண்டினோ மீது அதீத காதலில் இருக்கும் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடை “ஜிகர்தண்டா”,”ஜிகர்தண்டா – 2” மூலம் அதை முடிந்தளவு கொண்டுவந்தார். ஆனால் ரெட்ரோவில் அது தவறாக போனதற்கு படத்தின் தொடக்கத்தின் தேங்ஸ் கார்டிலே இருக்கிறது. “ஜானி” ரஜினியின் ரெபரென்ஸ். தளபதி கோவில் படித்துறை காட்சி. இளையராஜாவின் நாஸ்டாலஜி என்று இந்த மூன்றை சொல்லாம். நான்காவது ஒன்று உண்டு அது ஈழம். மன்னிக்கவும் ஐந்தாவதாக இன்னொன்று இருக்கிறது அது புத்தரின் தம்மமும்.
இவ்வளவு ஐட்டங்களை ஒரு படத்தில், ஒரே நேரத்தில் வைத்தால் என்னாவது. நாம் தாம் சிக்கி சின்னபின்னாமாகிறோம். சிறந்த மேக்கிங் – சிறந்த பின்னனி இசை – சிறந்த – கலை – என்று எல்லாவற்றையும் பக்கவாக செட் செய்துவிட்டு திரைக்கதையில் மட்டும் கோட்டை விட்டு இருக்கிறார்.
நமக்கு ஈழத்தின் மீது பற்று இருக்கலாம், ஆனால் அதன் முழு வரலாறு தெரியாமல் அதை பற்றி அறியாமல் ஏதாவது செய்ய நினைத்தால் அது சீமானிஸம் ஆகிவிடும். அது தாம் நிகழ்ந்து இருக்கிறது. ஈழத்தில் இறுதி போர் நடக்கும் போது ஈழ ஆதரவு தலைவர்கள் , இல்ல தமிழ்நாட்டு அரசுனால ஒன்றும் செய்ய இயலாது அதற்கு அதிகாரம் இல்லை என்று அப்போது யாரும் சொன்னதாக நினைவில் இல்லை. இப்போது அதை தவிர வேறு எதையும் சொல்வதே இல்லை. அடுத்து சீமானின் 15 வருட பொய்யை அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்துவிட்டு, தற்போது சீமான் சொன்னதெல்லாம் பொய் என்று சாட்சியங்களை ஆதாரங்களையும் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். அது உண்மையும் கூட தான். இருந்தும் ஈழ ஆதரவு தலைவர்களுக்கே இவ்வளவு தாம் தெரியும் என்றால் ஈழத்தின் மீது பற்று வைத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜுக்கு என்ன தெரிந்திருக்கும்?.
கிருஷ்ணனையும் – புத்தனையும் ஒன்று சேர்ப்பதை கூட மன்னித்துவிடலாம். வடநாட்டு சங்கதி நமக்கு எதுக்கு?? என்று, சந்தடி சாக்கில் கிருஷ்ணனுடன்- முருகனையும் – பாரியையும் இணைக்க நினைத்ததெல்லாம், பையனுக்கு ரொம்ப ஆர்வகோளாரு போலயே என்று நினைக்க தோன்றுகிறது.
Vijis Palanichamy