நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் என்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த ரோபோ சங்கரின் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில், காமெடி பேச்சாளராக ஜொலித்தவர் ரோபோ சங்கர். தனது திறமையாலும், அயராத முயற்சியாலும் வெள்ளித்திரையிலும் காமெடி நடிகராக வலம் வந்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த இவர், சமீபகாலமாக மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தார்.
தொடர்ந்து, திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இந்நிலையில், உணவுக்குழாய் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், நேற்றிரவு காலமானார். ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ரோபோ சங்கர் மறைவிற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.
நண்பர் ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.