பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட ராஜ் நிதிமோருவுடன் சமந்தா காதலில் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிய நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து சமந்தாவின் மேனேஜர் விளக்கமளித்துள்ளார்.
நாட்டையே சலசலப்புக்கு உள்ளாக்கிய வெப் சீரிஸில் ஒன்று ஃபேமிலி மேன். இதனை இயக்கவர்களில் ஒருவர் ராஜ் நிதிமோரு. இந்த சீரிஸில் நடித்தப் போது தான் சமந்தா-நாக சைதன்யா பிரிவும் ஏற்பட்டது. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண்ணான சமந்தா தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு போதிய வாய்ப்புகள் கிடைக்காத போதிலும், தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். தந்தையின் மறைவு, மயோசிடிஸ் தொற்று ஆகியவற்றில் இருந்து மீண்டு வந்த சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது கிசுகிசுகள் வெளியாவது நின்றபாடில்லை.

முதன்முறையாக தயாரிப்பில் களமிறங்கியுள்ள சமந்தா தெலுங்கில் ’சுபம்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். கடந்த மாதம் 9-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குநர் ராஜ் நிதிமோருவுடன் தோளில் சாய்ந்தாற் போன்றதொரு புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் சமந்தா. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

ராஜ் நிதிமோருவின் மனைவி, ஷியாமளியும் இந்த உறவு குறித்து மறைமுகமாக பதிலளித்துள்ளார். “என்னைப் பற்றி நினைப்பவர்களுக்கு, பார்ப்பவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, பேசுபவர்களுக்கு, எழுதுபவர்களுக்கு, சந்திப்பவர்களுக்கு அன்புடன் வாழ்த்துகிறேன்” என பதிவிட்டது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தாவின் மேனேஜர் விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அதன்படி, ”சமந்தாவை பற்றிய காதல் வதந்திகள் எதுவும் உண்மையில்லை” என்று கூறியுள்ளார். நாக சைதன்யாவை பிரிந்த பிறகு இனி திருமணமே செய்துக் கொள்ள போவதில்லை என சமந்தா கூறியிருந்தது குறிப்பிடத்தகது.
