திருமணம் செய்துவிட்டு சேர்ந்து வாழ மறுப்பதாக பிரபல சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிறிசால்டா புகார் தெரிவித்துள்ளார்.

சமையல் கலை நிபுணரும், திரையுலக பிரமுகருமான மாதம்பட்டி ரங்கராஜ் அனைவராலும் அறியப்பட்டவர். சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் இல்ல விழாக்களில் சமையல் செய்து பெரும் பிரபலமடைந்தார். அவரது பாரம்பரிய உணவுகள் பொதுமக்கள் மத்தியிலும், சமையல் ஆர்வலர்களுக்கு மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த மாதம்பட்டி ரங்கராஜ், ‘பென்குயின்’ படத்திலும் நடித்தார். தொடர்ந்து, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிசால்டாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தனர். மேலும், ஜாய் கிறிசால்டா தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததோடு, அந்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிறிசால்டா சென்னை போலீஸ் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிவிட்டதாகவும், கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்துகொண்டு தன்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார் என்றும் தனது புகாரில் கூறியுள்ளார்.

முன்னதாக, மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் வைரலாகியது. அது பற்றி மாதம்பட்டி ரங்கராஜிடம், ஜாய் கிறிசால்டா கேட்டபோது அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஜாய் கிறிசால்டாவும் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version