தமிழ் சினிமாவில் தந்தை மூலம் சினிமாவுக்கு வந்தவர்களில் இன்று வரை ஜொலிப்பவர்கள் மிக மிக குறைவு தான். அப்படியான ஒருவர் சிலம்பரசன். 1983-ம் ஆண்டு பிறந்த சிம்பு, 4 மாத குழந்தையாகவே சினிமாவில் தோன்றிவிட்டார். அத்தோடு, 2002-ம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் சிம்பு. குழந்தை முதலே படங்களில் நடித்து வந்தவர், “ஐ ய எம் அ லிட்டில் ஸ்டார் ஆவேனே சூப்பர் ஸ்டார்” என 6 வயதில் அவரது தந்தை படத்தில் சுட்டித் தனமாக ஆடியவர், இன்று தனது 42 வயதில் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சிம்பு எத்தனை முறை சினிமாவை விட்டு சில காலங்கள் விலகி இருந்தாலும் கூட, மீண்டும் திரையில் வந்தால் மீண்டும் ரசிகர்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் அப்படியான ஒரு ராசி அவருக்கு. தற்போது அவரது நடிப்பில் வெளிவரவுள்ள ’தக் லைஃப்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ’செக்க சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னத்துடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் சிம்பு. வரும் 5-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சிம்பு.
இதனை தொடர்ந்து 49-வது படமாக இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘பார்க்கிங்’ படத்திலும்,
50-வது படமாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும், 51-வது படமாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து தற்போது சிம்பு ஜாக்கிசானுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இப்படத்தை ‘2018’ என்ற மலையாள ஹிட் திரைப்படத்தை இயக்கிய ஜூட் அந்தனி ஜோசப் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில், சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் இது மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.