ஜூன் 5-ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. கமல், சிம்பு, திரிஷா, அபிராமி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், ”தமிழ் மொழியில் இருந்து பிறந்தது தான் கன்னடம்” எனக் கூறியிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் இத்தகைய கருத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம் என கன்னட திரைப்பட சம்மேளனத் தலைவர் தெரிவித்திருந்தார்.
”நான் தவறு செய்யவில்லை, செய்தால் தானே மன்னிப்பு கேட்க முடியும்” என கூறியிருந்தார். இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. கமல்ஹாசன் பேச்சை குறிப்பிட்ட ஒரு சிலர் தவறாக அர்த்தத்தில் புரிந்து கொண்டு தவறான புரிதலை பரப்புகின்றனர். அதனால் தேவையற்ற சங்கடமான சூழலும், பதட்டமும் ஏற்படுகிறது. இந்திய மொழிகள் அனைத்திற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துபவர் நடிகர் கமல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.