கமல்ஹாசன் பேச்சு : போராட்டமும் :

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி உட்பட பல நடிப்பில் கடந்த ஜூன் 5-ம் தேதி தக் லைஃப் திரைப்படம் கர்நாடகா தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது. அதற்கு முன்னதாக மே மாதம் 24-ம் தேதி நடந்த இசை வெளியீட்டு விழாவின் போது, நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னட மொழி என பேசியிருந்தார். இதற்கு கன்னட அமைப்பினர் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்தோடு கமல்ஹாசன் மன்னிப்பு தெரிவித்தால் மட்டும் தான் படம் கர்நாடாவில் வெளியிடப்படும் என தெரிவித்தனர்.

ஆனால் கமல் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்தார். அதனால் ஜூன் 5-ம் தேதி தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை. கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு : 

இதற்கிடையில் கர்நாடகாவில் தக் லைஃப் விவகாரத்தில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மகேஸ் ரெட்டி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக கர்நாடகா மாநில அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று (17.06.2025) இந்த வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் ப்உயன், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றம் காட்டம் : 

அப்போது கர்நாடகா மாநில அரசு எப்போது பதில் மனுத் தாக்கல் செய்யப் போகிறது? குண்டர்களையும் சட்டத்தை கையில் எடுக்கும் கும்பல்களையும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க முடியாது. சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும். கர்நாடகா அரசு உடனடியாக பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த பதில் மனுவை நாளையே கர்நாடகா அரசு தாக்கல் செய்தாக வேண்டும்” என்றனர் நீதிபதிகள். இதற்கு கர்நாடகா அரசு தரப்பில், தக் லைஃ படத்தின் தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

படத்தை அனுமதிக்க வேண்டும் : 

இதை நிராகரித்த நீதிபதிகள், தக் லைஃப் படத் தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தை அணுகினால் உங்களுக்கு என்ன? உங்களின் இந்த போக்கை அனுமதிக்க முடியாது. சட்டத்தின் படி எந்த ஒரு நபரும் தமது திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்க வேண்டும். திரையரங்குகளை எரிப்போம் என்றெல்லாம் அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது. பொதுமக்கள் திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை; ஆனால் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டனர்.

கமல்ஹாசன் சொன்னதில் என்ன தவறு?

அப்போதும் குறுக்கிட்ட கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த பிரச்சனை முடியும் வரை திரைப்படத்தை வெளியிடப் போவது இல்லை என தயாரிப்பாளர் அறிக்கையில் கூறியுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள், அதனால் என்ன இருக்கிறது? ஒருவருக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது என்பதாலேயே ஒரு படத்தை தடை செய்துவிட முடியாது. தணிக்கை குழுவின் சான்றிதழ் பெற்ற எந்த ஒரு திரைப்படத்தையும் வெளியிட அனுமதிக்கத்தான் வேண்டும். நமது அமைப்பில் சில தவறுகள் இருக்கின்றன. ஒருவர் அறிக்கை வெளியிட்டாலே அதனை உண்மை என மக்கள் நம்புகின்றனர். கமல்ஹாசன் சொன்னதில் என்ன தவறு? என்ன முட்டாள்தனமாக சொல்லிவிட்டார்? என விவாதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

கர்நாடக நீதிமன்ற வேலை அது அல்ல :

மேலும் நீதிபதி உஜ்ஜல் புயன் கூறுகையில், கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவது எல்லாம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல எனவும் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்னர், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தக் லைஃப் தொடர்பான ரிட் மனுவை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றுகிறோம். கர்நாடகா அரசு பதில் மனுவை நாளை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் விசாரணை வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version