தமிழ்த் திரையுலகம் உலகிற்கு அளித்த கொடை என்று ஒரு பட்டியலிட்டால் சிவாஜி, இளையராஜா என்ற வரிசையில் கட்டாயம் இடம்பெறும் தகுதி படைத்தவர் வைகைப்புயல் வடிவேலு.
தமிழ் மண்ணின் அசலான நகைச்சுவையை திரையில் லாவகமாக கடத்தியதில் வடிவேலுக்கு இணையென யாரையும் சொல்ல முடியாது. ஆபாச வசனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள், உடல்ரீதியாக ஒருவரை ஏளனம் செய்வது, மாற்றுத்திறனாளிகளை குறை சொல்வது போன்ற அபத்தங்கள் ஏதுமின்றி தன்னை தாழ்த்தி பிறரை சிரிக்கச் செய்யும் பாணியில் தனித்துவமானவர் வடிவேலு. குடும்பத்துடன் வயது வித்தியாசமின்றி அவரது நகைச்சுவைக்கு சிரிக்க முடியும். நம் வாழ்வின் அபத்தங்களை நகைச்சுவையாக மாற்றுவதில் தான் வடிவேலுவின் மேதமை அடங்கி இருக்கிறது. வெறும் நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாது குணசித்திர கதாபாத்திரங்களிலும் நம்மில் ஒருவராக வலம் வரும் நடிப்பாற்றல் கொண்டவர்.
தமிழ் திரையுலகம் பேச ஆரம்பித்த காலத்தில் கதாநாயகர்கள் என்றால் நன்றாக பாடத்தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதைய கதாநாயகர்களில் எத்தனை பேரால் சிறந்த முறையில் பாட முடியும் என்றால் கேள்விக்குறியே.. ஆனால் நகைச்சுவை நடிகர்களில் அசலான பாடகரைப் போல் பாடி, பெருவாரியான ரசிகர்களை ஈர்க்க முடியும் என்றால் அது வடிவேலுக்கு மட்டுமே உரித்தான பெருமை. தான் அறிமுகமான காலத்தில் இருந்தே அவ்வப்போது முழுநீள பாடல்களை பாடும் வாய்ப்பு வடிவேலுக்கு வாய்த்தது.
எட்டணா இருந்தா எட்டூரு என்பாட்டை கேக்கும், வாடி பொட்ட புள்ள வெளியே, பாலு பாலு நேபாளு, போயா உன் மூஞ்சில கைய வைக்க, ஊத்திக்கடா மச்சான் ஜோரா, போடாங்கோ, ஓரொண்ணு ஒண்ணு, கட்டுனா அவள கட்டணும்டா, குண்டக்க மண்டக்க என்று அவரது பாடல்கள் பட்டியல் உற்சாக விருந்துக்கு உத்தரவாதம் தருபவை. வெறும் நகைச்சுவை பாடல் என்று மட்டும் அல்ல, சமீபத்தில் மாமன்னன் படத்தில் இடம்பெற்ற மலையிலே தான் தீ பிடிக்குது ராசா என்ற சோக பாடலையும் நெஞ்சை உருக்கும் வகையில் பாடி நம்மை ஈர்த்தவர் வடிவேலு.
நேரடி பாடல்கள் மட்டுமல்லாது, புகழ்பெற்ற பல பழைய பாடல்களை தனக்கே உரித்தான பாணியில் புதுமெட்டில் பாடி நம்மை அட போட வைப்பதில் அசத்தல் மன்னர் வடிவேலு. இத்தகைய பாடல்களின் பட்டியலும் ரொம்பவே பெரிது. உதாரணத்திற்கு ஒரு பொய்யாவது சொல் பெண்ணே என்ற பாடலைக் கேட்டவுடன் வடிவேலுவின் முகம் நினைவுக்கு வராமல் இருக்குமா?
எதற்கு இவ்வளவு பெரிய பதிவு என்றால் மெட்ராஸ் மேட்னி என்றொரு புதிய படத்தில் என்னடா பொழுப்பு இது என்று ஒரு பாடலை வடிவேலு பாடியுள்ளாராம். மீண்டும் வடிவேலுவின் குரலில் நகைச்சுவைப் பாடலைக் கேட்க அவரது ரசிகர்கள் தயாராகி விட்டனர். கூடவே நாமும்…