மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே, மாரடைப்பு மற்றும் நுரையீரல் சிக்கல்கள் காரணமாக, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 92.
நேற்று சனிக்கிழமை மாலை திடீர் மாரடைப்பு மற்றும் சோர்வு ஏற்பட்டதை அடுத்து, போஸ்லே தெற்கு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் நுரையீரல் பாதிப்பு, நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவர் இன்று (ஏப்ரல் 12) சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலம் சாங்கியில் 1993ம் ஆண்டு பிறந்தவர் ஆஷா போஸ்லே. இவர் மறைந்த புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆவார். அவருக்கு இதயக் கோளாறு மற்றும் நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின.
1940-களில் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய போஸ்லே, தொடக்கத்தில் சிறு பட்ஜெட் படங்களுக்குப் பாடினார். பின்னர் 1950 மற்றும் 60-களில் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத பாடகியாக உயர்ந்தார். குறிப்பாக, 1957-இல் வெளியான ‘நயா தௌர்’ திரைப்படம் அவரது வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து ஓ.பி. நய்யார், எஸ்.டி. பர்மன், ஆர்.டி. பர்மன் மற்றும் கயாம் போன்ற ஜாம்பவான் இசையமைப்பாளர்களின் இசையில் அவர் பாடிய பாடல்கள் இன்றும் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளன.
அசாத்தியமான குரல் வளம் கொண்ட போஸ்லே, திரையிசைப் பாடல்கள் முதல் கஜல்கள், பாப், செவ்வியல் இசை, பஜனைகள் மற்றும் கேபரே பாடல்கள் வரை அனைத்து வகை இசையிலும் தனது முத்திரையைப் பதித்தவர். குறிப்பாக, திரையில் நடிகை ஹெலனின் நடனங்களுக்குப் போஸ்லேவின் குரல் ஒரு அடையாளமாகவே மாறியது. திரையில் தோன்றும் கதாபாத்திரங்களின் உணர்வுகளைத் தனது குரலால் பிரதிபலிப்பதில் அவர் வல்லவர் என்பதை உலகம் அறிந்தது.
அவரது இசைப் பயணத்தில் 1981-இல் வெளியான ‘உம்ராவ் ஜான்’ (Umrao Jaan) மற்றும் 1987-இல் வெளியான ‘இஜாசத்’ (Ijaazat) ஆகிய படங்கள் மிக முக்கியமானவை. இந்தத் திரைப்படங்களில் செவ்வியல் மற்றும் கஜல் பாடல்களில் அவர் காட்டிய ஆளுமைக்காக அவருக்கு தேசியத் திரைப்பட விருதுகள் கிடைத்தன. காலங்கள் மாறினாலும், தனது திறமையால் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து வந்த அவர், ‘ரங்கீலா’ மற்றும் ‘லகான்’ போன்ற பிற்காலத் திரைப்படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கித் தனது புகழை நிலைநாட்டினார்.
ஏழு தசாப்தங்களுக்கும் மேலான தனது நீண்ட காலப் பணியில், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிப் போஸ்லே சாதனை படைத்துள்ளார். கலைத்துறைக்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பைப் பாராட்டும் விதமாக, இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான ‘தாதாசாகேப் பால்கே’ விருது மற்றும் ‘பத்ம விபூஷண்’ ஆகிய விருதுகள் வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், தமிழில் நடிகர் ராமராஜனின் செண்பகமே செண்பகமே பாடல்.. நடிகர் ரஜினிகாந்த் – நயன்தாரா நடித்த சந்திரமுகி படத்தில், கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், செப்டம்பர் மாதம் பாடல் உள்ளிட்டவற்றால் தமிழ் ரசிகர்கள் மனதிலும் சிம்மாசனமிட்டு வீற்றிருப்பவர் ஆஷா போஸ்லே..
