நடிகர் சங்க உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே இனி சினிமாவில் நடிக்க முடியும் என நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் அறிவித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்குவது போல, நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே திரைப்படங்களில் நடிப்பதற்கான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் திரைப்படங்களில் கேமரா முன்நின்று நடிக்கும் நடிகர்-நடிகைகள், துணை நடிகர்-நடிகைகள் அனைவருமே நடிகர் சங்க உறுப்பினர் அட்டை பெற்றவராகத்தான் இருக்கவேண்டும்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொழில்முறை ஆயுள் உறுப்பினராக சேருவதற்கு சேர்க்கை கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள உறுப்பினர்களின் மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவிகளுக்கும், ஈமச்சடங்குக்கும் செலவிடப்பட்டு வருகிறது. இதுவரை சங்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் நடித்து கொண்டிருப்பவர்களிடம் அதன் பயனை எடுத்துரைத்து, வருகிற 20-ந் தேதிக்குள் உறுப்பினர் அட்டை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நடிகர்-நடிகைகளின் மேலாளர்கள், தயாரிப்பு நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன்” என விஷால் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version